பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
திருத்தணி:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், நேற்று நடந்த மயான கொள்ளை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருத்தணி பழைய பஜார் தெருவில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், நேற்று முன்தினம் மகா சிவராத்திரி முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இரவு முழுவதும் பஜனை கோஷ்டியினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. நேற்று, மயான கொள்ளை திரு விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:30 மணிக்கு உற்சவர் பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார். பின்னர் அம்மன் ஊர்வலமாக ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள நந்தி ஆற்றில் மயான சூரை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அம்மன் மீது காய்கறி, சுண்டல் மற்றும் தானிய விதைகள் வீசி எரிந்து வழிப்பட்டனர். ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை அடுத்த, நரசிம்மபேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு உற்சவர் அம்மன் பூ பல்லக்கில் ஊர்வலமாக மயானத்தை நோக்கி புறப்பட்டார். பக்தர்கள் பத்ரகாளியம்மன் வேடம் அணிந்து மயானத்திற்கு திரண்டனர். அப்பால்ராஜூலு கண்டிகை கூட்ரோட்டில் உள்ள மயானத்தில் மயான கொள்ளை நடந்தது. அதேபோல் விளக்காணம்பூடி புதூர் கிராமத்திலும் மயான கொள்ளை திருவிழா நடந்தது.