பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
திருப்பூர்: மனிதனின் அறியாமையை அகற்றி, ஆத்மா, பரமாத்மா குறித்த போதனைகளை சொல்லும் சக்தி, வேதங்களுக்கு மட்டுமே உண்டு, என ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். திருப்பூர் ஸ்ரீராம பஜனை மடம் சார்பில், ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம், குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: ஆத்மா, பரமாத்மா குறித்த அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, நமது அறியாமைகளை அகற்றுபவை, வேதங்கள். 17 மாதா, பிதாவுக்கு சமமாக வேதங்கள் போற்றப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க வேதங்களை அறிந்தவர்கள், அயோத்தியில் அதிகளவில் இருந்தனர். மக்களின் மனம் அறிந்து, அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்த தசரத மன்னன், திருமணமாகி, பிள்ளை இல்லையே என கவலையுற்றார்.அசுரர்களின் கொடுமைகள் தாங்க முடியாத தேவர்கள், பகவான் நாராயணரிடம், அசுரர்களை கொன்று, பூ பாரத்தை குறைக்க வேண்டினர். பிள்ளை வேண்டி தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். இதை பார்த்த நாராயணர், அயோத்தியை தேர்ந்தெடுத்து பிறக்க முடிவு செய்தார்.
ராமனுக்கு உதவி செய்ய, பிரம்மன் ஜடாயுவாக; இந்திரன் வாலியாக; சூரியன் சுக்ரீவனாக; பிரகஸ்பதி தரனாக; வாயு ஆஞ்சநேயராக அவதரிக்க முடிவு செய்தனர். சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம், நவமி திதியில் முதலில் ராமன், அடுத்து லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் பிறந்தனர். ராம கைங்கர்யத்துக்காகவே பிறந்த லட்சுமணன், பிள்ளைப்பருவம் முதல் ராமனின் நிழல்போல் எப்போதும் அவரோடு இருந்தார். பிள்ளைகள் நால் வரும் குலகுரு வசிஷ்டரிடம் கல்வி கற்றனர். ராமனுக்கு 12 வயது ஆனது. ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்விப்பது குறித்து, ரிஷிகள், முனிவர்களிடம் தசரதன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த, விஸ்வாமித்திரர், தான் செய்யப்போகும் யாகத்தை அரக்கர்களிடம் இருந்து பாதுகாக்க, ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.முதலில் மறுப்பு தெரிவித்த தசரதன், குலகுரு வசிஷ்டரின் அறிவுரையை ஏற்று, ராம, லட்சுமணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்பினார். பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு, சராயு நதியின் தென்கரையில் நடந்தார் விஸ்வாமித்திரர். முதலில், காமாஸ்ரமம் வந்தது, அடுத்து, ஓர் அடர்ந்த காட்டுக்குள் பயணித்தனர். ராட்சத மலைபோல் தாடகை வந்து நின்றாள்; விஸ்வாமித்திரரின் ஆணையை ஏற்று ராமன், வில்லை வளைத்து அம்பு எய்தான்; தாடகை மடிந்து, தரையில் வீழ்ந்தாள். மனம் மகிழ்ந்த விஸ்வாமித்திரர், பலா, அதிபலா என்கிற இரண்டு அற்புதமான மந்திரங்களை ராமனுக்கு உபதேசித்தார். தொடர்ந்து நடந்து சென்று, யாகம் செய்யவேண்டிய இடமான சித்தாஸ்ரமத்தை அடைந்தனர். விஸ்வாமித்திரர் யாகத்தை துவக்கினார்; ராம, லட்சுமணர்கள் கண்ணுறக்கம் இன்றி யாகத்தை காத்தனர். தாடகையின் புதல்வர்களான சுபாகு, மாரீசன் இருவரும் யாகத்தை அழிக்க அங்கு வந்தனர். லட்சுமணன் அம்பு எய்து, சுபாகுவை கொன்றார்; மாரீசனை கொல்லாமல், ராமன் விரட்டி விட்டார். யாகம் முடிந்து அனைவரும், வடக்கு நோக்கி பயணித்து, மதிலையை அடைந்தனர். மாடத்தில் இருந்த சீதை, ராமனை நோக்கினாள்; ராமன் சீதா தேவியை நோக்கினார். மதிலை மன்னன் ஜனகர், விஸ்வாமித்திரரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கே, சீதாவின் திருமணத்துக்காக, 5,000 வீரர்கள் இணைந்து 8 சக்கரம் பூட்டிய வண்டியில் வைத்து, சிறப்புமிக்க சிவதனுசை கொண்டு வந்தனர். பல நாட்டு மன்னர்கள் முயன்றும் சிவ தனுசை அசைக்கக்கூட முடியவில்லை.விஸ்வாமித்திரர், வில்லை பார்த்துவா என ராமனை பணித்தார். வில் அருகே சென்ற ராமன், அதை நடுவில் பிடித்து அநாயசமாக தூக்கினார்; நாண் ஏற்றி வளைத்தபோது, சிவதனுசு ஒடிந்தது. வில்லை ஒடித்ததும், சீதையை ராமன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, ஜனகர் தெரிவித்தார். ஆனால் ராமனோ, "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; அவர் ஒப்புதல் அளித்தால்தான் சீதையை திருமணம் செய்து கொள்வேன் என்றார். தகவல் அயோத்திக்கு தெரிவிக்கப்பட்டது. ராமனுக்கு திருமணம் செய்விப்பதற்காக, படைகள் புடை சூழ தசரதன் மிதிலையை வந்தடைந்தார்; சீதா, ராமர்கல்யாணம் இனிதே நடந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.