பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
11:04
திருநெல்வேலி:தென் திருப்பதி என்றழைக்கப்படும் மேலத் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.நெல்லை அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் மேலத் திருவேங்கடநாதபுரத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரமோற்சவ விழா 11 நாட்கள் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. திருவிழா துவங்குவதற்கு முன்னதாக பக்தர்கள் தரப்பில் திருவிழா முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் எனவும், கோயிலில் ஒரு அர்ச்சகர் மட்டுமே பணியில் இருப்பதால், காலியாகவுள்ள மற்றொரு அர்ச்சகர் பணியிடத்தை நிரப்பவும், மடப்பள்ளி (நெய்வேத்யம் தயார் செய்பவர்) பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிர்வாக அதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் திருவிழா துவங்கும் நாள் வரை எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லையாம்.
அர்ச்சகர் மற்றும் மடப்பள்ளி பணியிடமும் நிரப்பப்படவில்லை. இதனால் ஒரே ஒரு அர்ச்சகரை வைத்து தான் திருவிழாவை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலமாகவே திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் விலைவாசி உயர்வாலும், கோயில் சப்பரத்தை தூக்கிச் செல்லும் சீர்பாதம், மேளம் ஆகியோருக்கான சம்பளம் அதிகரித்திருப்பதாலும் திருவிழா செலவுத் தொகையும் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தினந்தோறும் கட்டளை நடத்த என்ன பணம் செலவானதோ அதையே திருவிழா செலவுக்கு கட்டளை மற்றும் உபயதாரர்கள் வழங்குகின்றனர். கட்டளை மற்றும் உபயதாரர்கள் திருவிழாவுக்கான தொகையை, விலைவாசிக்கு ஏற்றபடி வழங்காததால் திருவிழாவை நடத்த பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவிழாவுக்கு முன்பாக நிர்வாகத் தரப்பில் இருந்து, திருவிழா சம்பந்தமாக கட்டளை மற்றும் உபயதாரர்களை அழைத்து பேசி யும், சீர்பாதம், மேளம், பூக்கள் மற்றும் அபிஷேகம், நெய்வேத்யம், அர்ச்சகர் சம்பாவணை போன்ற செலவுகளை பேசி முடிவு செய்திருந்தால் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்த்திருக்க முடியும்.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைப் பொறுத்த வரையில் திருவிழாவுக்கு ஆகும் செலவுத் தொகையினை தருவதற்கு பல உபயதாரர்கள் போட்டி போட்டு தரத் தயாராகவுள்ளனர். ஆனால் ஏற்கனவே பல ஆண்டுகளாக கட்டளை மற்றும் உபயதாரர்களாக இருப்பவர்களுக்கே கட்டளை வழங்கப்படுவதால் இதுபோன்ற திருவிழாக்களில் புதிய உபயதாரர்கள் பங்களிப்பு செய்வதில்லை. கட்டளை நடத்துபவர்கள் கோயில் வயல் மற்றும் சொத்துக்களை வைத்துக் கொண்டு பழைய பல்லவியை பாடுவதால் திருவிழாவை முறையாக நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.குளறுபடிகளுக்கு காரணம் என்ன?.
இதுபோன்ற பழமைவாய்ந்த, சிறப்பு பெற்ற கோயில்களுக்கு அதிகாரி நியமிக்கப்படும் போது, அவருக்கு ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கோயில்கள் கூடுதல் பொறுப்பாக உள்ளது. இதனால் மற்ற கோயில் பணிகளையும் கவனித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட கோயில்களையோ அல்லது அந்த கோயில்களில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த அதிகாரியால் முடிவதில்லை. இதற்கிடையே உதவி ஆணையர், இணை ஆணையர் அலுவலக கூட்டம், டெண்டர் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்படுவதால் குளறுபடி ஏற்படுவதாக நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.பக்தர்கள் வேதனைவெங்கடாஜலபதி சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் யானை வாகனம் சீரமைக்கப்படாமல் இருந்ததால் யானை வாகன வீதியுலா நிகழ்ச்சி நடைபெறவில்லை. சென்னையில் இருந்து அந்த கட்டளையை நடத்த வந்திருந்த கட்டளைதாரர் மிகுந்த மனவேதனை அடைந்தார். பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர். நாதஸ்வரம் இல்லாமல் திருவிழா நடந்துவருவது பக்தர்களை வேதனைப்படுத்தியுள்ளது. கோயில் மணியமும் பல்வேறு வெளிப்பணிகளுக்கு நிர்வாக தரப்பில் இருந்து அனுப்பப்படுவதால் அர்ச்சனை டிக்கெட் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்படுகின்றன.இந்த விஷயத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் தீவிர கவனம் செலுத்தி பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா முறையாக நடக்கவும், கோயிலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.