பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
11:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இக்கோவிலில், ஸ்தலசயனப்பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர், பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் கொண்டாடும் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 28ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. விழாவில் முக்கிய உற்சவங்களாக, 23ம் தேதி, கருடசேவை, 25ம் தேதி, திருத்தேர் வீதியுலா உட்பட பல்வேறு உற்சவங்கள் மற்றும் வாகன சேவை நடைபெற்றது. 28ம் தேதி, பிற்பகலில் துவாதச ஆராதனம் மற்றும் இரவு புஷ்பயாக கேடயம் ஆகிய உற்சவத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. நிறைவாக, நேற்றுமுன்தினம் துவங்கிய விடையாற்றி திருமஞ்சனம், நாளை வரை நடைபெறுகிறது. கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.