பதிவு செய்த நாள்
22
மே
2013
10:05
அந்தியூர்: அந்தியூர் பர்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பிற நடந்த குண்டம் விழாவில், தமிழகம், கர்நாடகாத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அந்தியூர் அடுத்த பர்கூர் மலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, 800 ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் குண்டம் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல், ஒரு மாதத்துக்கு முன் நடந்தது. குண்டம் விழாவின் சிறப்பு அம்சமாக, கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன், கொல்லேகால் கம்பாள சித்தேஸ்வரர், சுள்வாடி பிரம்மேஸ்வரர், நெல்லூர் சிவலிங்கேஸ்வரர், தேவர்மலை பஞ்சேஸ்வரர், சுண்டப்பூர் வீரபத்ரஸ்வாமி, தாமரைகரை வீரேஸ்வரர், சத்தி மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன், மேட்டூர் தாலுகா, பாலவாடி சித்தேஸ்வரர் ஆகிய ஒன்பது ஸ்வாமிகள், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஒன்பது ஸ்வாமிகளுக்கு தேவ பூஜைகள், பஜனைகள் முடிந்து, நேற்று அதிகாலை, 5.30க்கு கல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஸ்வாமிகள் சார்பில், பூசாரிகள் பூக்குழியில் இறங்கினர். பூக்குழி இறங்குதலை காண, பர்கூர் மலை, 33 கிராமங்கள், மாதேஸ்வரன் மலை, 18 கிராமங்கள், ஆசனூர், 700 தட்டேபாகிலு கிராமங்களிலும், அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பர்கூர் கோவிலுக்கு பக்தர்கள் குவிவதற்கு, ஒன்பது சிவன் ஸ்வாமிகளுக்கும் ஒரே இடத்தில் பூக்குழி இறங்குதலே சிறப்பம்சம். குண்டம் நிகழ்ச்சியையடுத்து, காலை 8 மணியில் இருந்து, சிறப்பு பூஜைகள், பக்த தரிசன சேவை, மஞ்சள் நீராட்டு சேவை ஆகியன நடந்தன. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், கோவிலுக்கு வந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஒன்பது ஸ்வாமிகளுக்கும், சிறப்பு பூஜைகள் செய்து வழியனுப்பு விழா நடக்கிறது. பாதுகாப்பு கருதி அந்தியூர் சரகத்துக்குட்பட்ட, 50க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர் காவல்படை வீரர்கள், வனத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.