பதிவு செய்த நாள்
01
மார்
2011
03:03
அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார் ஆயினர். தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். சடையனார் வாழ்க்கைத் துணைவியான இவ்வம்மையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் பெற்றெடுத்துப் பெரும் பேறு பெற்று உய்ந்தார்கள். இச்சைவத் திருவாட்டியாரின் புண்ணிய பயனையும், பெருமையையும், புகழையும் உரைக்கத்தான் ஒண்ணுமோ ? சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது. ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார். சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார்.
சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர்.
சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.
முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது.
அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளை யானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார்.
வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய! நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார்.
சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும். ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர்.
குருபூஜை
: இசைஞானியாரின் குருபூஜை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.