பதிவு செய்த நாள்
10
ஜூன்
2013
10:06
கிருஷ்ணாகுப்பம்: சித்திரக்கட்டி எல்லையம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கிருஷ்ணாகுப்பம் சித்திரக்கட்டி எல்லையம்மன் கோவில், தீ மிதி திருவிழா கடந்த வியாழக்கிழமை துவங்கியது. இதையடுத்து, கோவில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஊர் முழுக்க வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவையொட்டி, அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.நேற்று முன்தினம் மாலை, பக்தர்கள் அலகு குத்தி, அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், டிராக்டரில் வலம் வந்தார். பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி, டிராக்டரை இழுத்து வந்தனர். மேலும், 16 அடி நீளம் கொண்ட அலகை, கன்னத்தில் குத்தியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.நேற்று மாலை, தீ மிதி திருவிழா நடந்தது. மாலை, 6:00 மணியளவில், ஊர் எல்லையில், அம்மனுக்கு நீராட்டு வைபவம் நடந்தது. பின், கோவில் முன்பாக, அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இரவு, 8:00 மணியளவில் வாண வேடிக்கையுடன் சித்திரக்கட்டி அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.