பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பட்லூரில் உள்ள கரியகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடக்கும். நடப்பாண்டு, 15 நாட்களுக்கு முன், குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பூச்சாட்டுதலுக்கு பின், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு பூக்குழி திறக்கப்பட்டு, அக்னி மூட்டப்பட்டது. நேற்று காலை, 10 மணிக்கு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வாக்கு கொடுத்தவுடன், 11.30 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. தலைமை பூசாரி குண்டம் இறங்கியவுடன், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரும், கையில் பூக்கள் சுற்றப்பட்ட பிரம்புகளுடன், குண்டம் இறங்கினர். பட்லூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பூனாச்சி உட்பட, 20க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மதியம், 2 மணிக்கு எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுறுகிறது.