பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
சிரம்பை காசிக்கு வருவதற்கு முன்பே, மகோற்கடன் அங்கு சென்று சேர்ந்து விட்டார். அவர் காசிராஜனுடன் அரண்மனைக்குள் நுழைய முயன்ற போது, தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட கூடன் என்ற அசுரன், ஒரு பெரும்பாறையாக மாறி அரண்மனை முன் வந்து வாசலை அடைத்து விட்டான். காசிராஜனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மகோற்கடன் இதற்கெல்லாம் அஞ்சுபவரா என்ன? காசிராஜா! இது பாறையல்ல. தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட அசுரன். பாறையாக மாறி இங்கே நம்மை வழிமறிக்கிறான். நம் பின்னால் ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஆயிரம் தேங்காய்களை இந்தப் பாறை மீது வீசச்செய், என்றார். உடனடியாக தேங்காய்களைக் கொண்டு வரச்செய்தான் காசிராஜன். எல்லா வீரரும் ஆளுக்கொன்றாக தேங்காய்களை பாறையில் வீசியெறிந்தனர். பாறை தவிடு பொடியாகி விட்டது. இதில் இருந்து தான் விநாயகருக்கு விடலை எனப்படும் சிதறுகாய் போடும் வழக்கம் உருவானது. சிதறுகாயின் நோக்கம், நாம் எடுத்துக்கொண்ட செயலைத் தங்கு தடையின்றி முடிக்கத்தான். குறிப்பாக, மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வெழுதவே, சிதறுகாய் அடிக்கிறார்கள்.பின்னர் அவர்கள் அரண்மனைக்குள் சென்றனர். அரண்மனையில் இருந்த புரோகிதரான தருமதத்தர் என்பவர் மகோற்கடனை வரவேற்றார். மகோற்கடன் எப்படி கணபதியின் அவதாரமோ, அதுபோல் தருமதத்தர் பிரம்மாவின் அவதாரமாவார். அவர், பூமியில் பிறந்திருக்கும் விநாயகரான மகோற்கடரை வணங்கும் நோக்கத்திலும், மற்றொரு முக்கிய நோக்கத்துடனும் முதல் ஆளாக வரவேற்பு கொடுத்தார். மகோற்கடன் சிறுவன் அல்லவா? அரண்மனை தோட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் குழந்தைகள், காசிராஜன் மகன் திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். காசிராஜனிடம் சொல்லிவிட்டு, அவர்களோடு விளையாடும் ஆசையில் அங்கே ஓடிவிட்டார்.
தருமதத்தர் அறிவு வாய்ந்த புரோகிதர். வயதில் பெரியவர். வேதஅறிவில், அவரை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லுமளவு அற்புதமானவர். அப்படிப்பட்ட அறிவுஜீவி, சிறுவனான மகோற்கடரை ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றார் என காசிராஜன் ஆச்சரியப்பட்டான். விஷயம் இதுதான். தருமதத்தருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருத்தி சித்தி, மற்றொருத்தி புத்தி. இந்தப் பெண்களை மகோற்கடனுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்பது அவரது விருப்பம். இந்த விருப்பத்தை தருமத்தர் காசிராஜனிடம் தெரிவித்தார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். காசிராஜனின் மகன் திருமணத்துக்கு முன்னதாகவே, இவர்களது திருமணத்தை நடத்தி விட முடிவெடுத்தனர். உடனே தருமதத்தர், விளையாடிக் கொண்டிருந்த மகோற்கடனை நோக்கிச் சென்றார். மகோற்கடரே! தங்கள் தந்தை காஷ்யபரும், நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு சித்தி, புத்தி என்ற புத்திரிகள் உள்ளனர். தாங்கள், மிக உயர்ந்தவர் என்பதை நான் அறிவேன். தங்களுக்கே என் மகள்களை மணம் முடித்து வைக்க ஆசைப்படுகிறேன். தாங்கள் எனது ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள வேண்டும், என்றார். மகோற்கடரும் இதற்கு சம்மதித்து புறப்பட்டார். இந்த நேரத்தில் தான் சிரம்பை வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியும்! மகோற்கடனை அவ்வளவு எளிதில் தன்னால் ஜெயிக்க முடியாது என்று! எனவே, மணமகனுக்கு அலங்காரம் செய்யும் பணிப்பெண் போல வேஷம் தரித்து, மகோற்கடரே! தங்களுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி நீராட்ட வந்திருக்கிறேன். தாங்கள், நீராட்ட அறைக்கு வர வேண்டும், என்றாள். மகோற்கடன் அவளிடம், அம்மா! நான் சிறுவன் தான்! இதோ, இந்த இடத்திலேயே குளிக்கிறேனே, என்று ஒரு பொதுஇடத்தைக் குறிப்பிட்டார். எப்படியோ வந்த காரியம் நடந்தால் சரிதான் என எண்ணிய சிரம்பையும் அதற்கென்ன! அப்படியே ஆகட்டும், என சம்மதித்து விட்டாள்.
மகோற்கட மாப்பிள்ளை நீராடும் காட்சி காண அனைவரும் கூடியிருந்தனர். சிரம்பை மிகவும் புத்திசாலி போல, அந்த திரவியங்களுடன் விஷத்தை சிறிதளவு சேர்த்திருந்தாள். அதை முகத்தில் பூசும்போது, சிறிதளவு உதட்டில் பட்டுவிட்டால் கூட போதும்! உயிர் பிரிந்து விடும்.... அந்தளவுக்கு கொடிய விஷம் அது. மகோற்கடர் சம்மதித்தார். ஒரு தாயே தன் பிள்ளைக்கு வாசனாதி திரவியங்கள் பூசி நீராட்டுவது வழக்கம். எதிரியாயினும், தாய் ஸ்தானத்தில் இருந்து தனக்கு திரவியம் பூசவந்தவளை தடுக்காத மகோற்கடர், அவள் தன் உதட்டருகே கையைக்கொண்டு வந்ததும், அம்மா! தாங்கள் யாரோ எவரோ? இந்த அரிய வாசனாதி திரவியங்களை என் மீது பூசியுள்ளீர்கள். இதற்குரிய பலனை தாங்கள் அனுபவிப்பீர்கள், என்றார் சமயோசிதமாக. அவ்வளவு தான்! விஷம் கடகடவென சிரம்பையின் உடலில் ஏறியது. அவள் விநாயகராகிய மகோற்கடரின் உடலில் கை வைக்கும் பாக்கியம் பெற்றுவிட்டதால், நேரே சொர்க்கம் போய் விட்டாள். அவள் சொர்க்கம் போனதற்கான காரணமறிந்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், மகோற்கடர் மஞ்சள் நீரில், நீராடி, அங்கவஸ்திரங்கள் அணிந்தார். சிறுமிகளான சித்தி, புத்தியர் அழகு பொங்க அவரருகே அமர்ந்தனர். இருவருக்கும் மங்கலநாண் பூட்டி துணைவியராக ஏற்றார் மகோற்கடர். இதன்பிறகு காசிராஜனின் மகன் திருமண ஏற்பாடுகள் துவங்கின. அப்போது ஒரு அமைச்சர், மன்னரே! தங்கள் மகனின் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுபற்றி தாங்கள் சிந்தித்தீர்களா? என்றார். காசிராஜன் கலவரத்துடன் அவரது முகத்தைப் பார்த்தான்.