பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
மாமன்னரே! நம் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கும் மகோற்கடர் வேதாந்தக, நராந்தகரின் உறவுக்காரர்களை அழித்து விட்டார். இதனால். இப்போது அவர்கள் நம் மீது கோபமாக இருப்பது <உறுதி. இளவரசருக்கு திருமணம் நடக்கும் வேளையில், அவர்கள் இங்கு வந்து இடையூறு செய்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பது உறுதி. திருமணத்துக்கு வருவோர் ஒருவரைக் கூட அவர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள். இந்த விபரீதத்தை மகோற்கடர் தடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அந்த சூரர்களின் வதம் முடிந்த பிறகு, இளவரசருக்கு திருமணம் நடத்துவதே நல்லதென நினைக்கிறேன். இதற்காக, ஏற்கனவே குறிக்கப்பட்ட முகூர்த்த நாளை சற்று தள்ளி வைத்தால், கூட தவறில்லை என்பது எனது அபிப்ராயம். தாங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தங்கள் கட்டளைப் படியே நடக்கிறோம், என்றார் அந்த புத்திசாலி மந்திரி. காசிராஜனுக்கும் மந்திரி சொல்வது சரியென்றே பட்டது. இருப்பினும், குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற, அந்த மகோற்கடரையே சரணடைவதென முடிவெடுத்து, மகோற்கடர் தங்கியிருந்த அறைக்குச் சென்றான். அப்போது, சித்தி, புத்தியருடன் மகோற்கடர் கூடி களித்திருந்தார். சித்தி, புத்தி தேவியர் தங்கள் கணவரிடம் எங்கள் இதய தெய்வமே! தாங்கள் யானை முகத்துடனேயே எப்போதும் இருக்கிறீர்கள். இது பூலோகம். இங்கே, மனித ஜென்மமே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எங்கள் கணவர் மனித முகத்துடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தேவையான காலங்களில் மட்டும் தாங்கள் முகத்தை மாற்றிக் கொள்வது நல்லது. யானைத் திருமுகம் உங்களுக்கு அழகூட்டுகிறது என்றாலும், மனித முகத்திலும் தங்களைக் காண வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கத்தானே செய்யும். தாங்கள் இவ்வுலகில் யாருக்கும் இல்லாத பேரழுகுடன், மனித முகத்துடன் எங்களுக்கு காட்சியருள வேண்டும், என்றனர். மனைவியரின் நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. தங்கள் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக பெண்களின் நியாயமான விருப்பம் தானே! மகோற்கடர் மனித முகத்துக்கு மாறிவிட்டார். ஒளி வெள்ளம் பொங்கிய பேரழகுடன் அவர் மனைவியருடன் உறவாடிக் கொண்டிருந்த போது, காசிராஜன் அவரது அனுமதி பெற்று அறைக்குள் வந்தான். அவனுக்கு அதிர்ச்சி. இங்கிருந்த யானை முகச் சிறுவனை எங்கே! சித்தி, புத்தியர் ஒரு இளைஞனுடன் இருக்கின்றனரே! என்ற அவனது எண்ண ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மகோற்கடர்.
காசிராஜனுக்கு யானை முகத்துடன் காட்சி தந்தார். காசிராஜா! புதுப்பெண்களான இவர்கள் என்னை மனித முகத்துடன் காண ஆசைப்பட்டனர். அதன் படியே நான் இம்முகத்துடன் விளங்குகிறேன். அது போகட்டும்! என்ன காரணமாக என்னைக் காண வந்தாய்? என்றார்.காசிராஜன் எல்லா விபரத்தையும் எடுத்துச் சொன்னான். காசி மாமன்னனே! இதற்கெல்லாம் கலங்காதே. மகோற்கடனை நம்பியவர்கள் சிரமங்கள் தங்களுக்கு இல்லை என உறுதியாக நம்பலாம். திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். நடக்கப்போவதை அமைதியாக இருந்து வேடிக்கை பார், என்றார் மகோற்கடர். காசிராஜன் மிகுந்த மகிழ்ச்சியுடன், மகோற்கடரே! இனி எனக்கு கவலையில்லை. தாங்கள் புதுமணமகன். புது மணமக்களை விருந்துக்கு அழைப்பது எங்கள் பண்பாடு. தாங்கள், தங்கள் துணைவியருடன் இதே மனித முகத்துடன் எங்கள் இல்லத்துக்கு எழுந்தருள வேண்டும், என்றான். மகோற்கடனும் ஒப்புக்கொண்டார். மகோற்கடர் தம்பதியரை அரண்மனையின் அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றனர் காசிராஜன் தம்பதியர். அங்கே தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. தலை வாழை இலை விரித்து மணமக்களுக்கு உணவு பரிமாறினாள் பட்டத்தரசி. அப்போது, அவள் வைத்த உணவு வகைகளுக்கு நடுவே, ஒரு உருண்டை வந்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் கொண்டைக்கடலை, பொரி என எளியவகை உணவுகள் வந்து அமர்ந்தன. காசிராஜனும், அவன் தேவியும், சுவாமி! இதென்ன அதிசயம்! இந்த உணவுகளை நாங்கள் தயாரிக்கவே இல்லையே! இவை உங்கள் இலைக்கு வந்தது எப்படி? என்றனர். எல்லாம் அந்த புருசண்டியின் வேலை தான், என்றார் மகோற்கடர் கண்களை சிமிட்டியவராய்! சித்தி, புத்தியர் கூட இந்த அதிசயம் கண்டு, இது பற்றி அறிய ஆவல் கொண்டனர். புருசண்டியா! அப்படியென்றால்... என இழுத்த சித்தி, புத்தியரிடம்... தேவியரே! புருசண்டி என்றால் ஏதோ பொருள் அல்ல. அவர் ஒரு முனிவர். தண்டகாரண்யக் காட்டில் வசிப்பவர்.
எனது பக்தர். அவர் ஒவ்வொரு சதுர்த்தி திதியிலும், இதோ இருக்கிறதே! மோதகம் என்னும் உருண்டை... இதையும், கரும்பு, பொரி, கடலை ஆகியவற்றையும் படைத்து என்னை நினைத்து வணங்குவார். அவை என்னை வந்து சேர்ந்து விடும். காசிராஜன் பரிமாறிய ஆடம்பர உணவும் எனக்கு பிடிக்கும்! அதேநேரம், ஏழை ஒருவன் பரிமாறும் பக்தியுடன் பரிமாறும் எளிய உணவும் பிடிக்கும், என்றார். சித்தி, புத்தியரின் ஞானதிருஷ்டியில், தாங்கள் தெய்வப்பெண்கள் என்பதும், இங்கிருக்கும் மகோற்கடர் சாட்சாத் விநாயகப் பெருமான் என்பதும் விளங்கியது. அவர்கள் அவரது இலையில் இருந்த மோதகப் பிரசாதத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டு, காசிராஜன் தம்பதியருக்கும் கொடுத்தனர். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மட்டுமல்ல! எல்லா சதுர்த்தி திதிகளிலும் (அமாவாசை மற்றும் பவுர்ணமி கழிந்த நான்காம் நாள்) விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால், நமக்கு செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். விருந்துக்குப் பின் தம்பதியர் விடை பெற்றனர். அன்றிரவில் காசிநகரே அல்லோகோலப்பட்டது. காவலர்கள் ஓடோடி வந்து மன்னரிடம், மகாராஜா! மகாராஜா! யாரோ பயங்கர உருவம் கொண்ட அசுரர்கள் மூவர் நம் நகரையே சின்னா பின்னப்படுத்துகிறார்கள். ஒருவன் வாயைத் திறந்தால் நெருப்பைக் கக்குகிறான். இன்னொருவன் புயலாக மாறி கட்டடங்களைத் தகர்க்கிறான். ஒருவன் வானத்தில் ஒரு உதடும், பூமியில் ஒரு உதடுமாக வைத்து போவோர் வருவோரையெல்லாம் பிடித்து விழுங்குகிறான். அவர்களைக் கண்டாலே குலை நடுங்குகிறது. எங்களால் அவர்களுடன் போராட முடியவில்லை. தாங்களே மக்களைக் காக்க வேண்டும் என்றனர்.