பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
காசிராஜனுக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்நிலையில், தங்களைக் காக்க மகோற்கடரை விட்டால் ஆளில்லை என்பதால், அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினான். மகோற்கடரை சித்தி, புத்தியர் மூலம் எழுப்பினான். நடந்து கொண்டிருக்கும் அபாயத்தை விளக்கினான். அப்படியா? என்று சாதாரணமாகச் சொன்ன மகோற்கடர், தன் கமண்டலத்தை எடுத்தார். தீர்த்த நீரை கையில் எடுத்து வீசினார். அந்த நீர்த்துளிகள் பறந்து சென்றது. அங்கே தீயாக மாறி எரிந்து கொண்டிருந்த ஜ்வாலாமுகன் என்ற அசுரன், அந்த நீர்பட்ட மாத்திரத்தில் அணைந்து விழுந்து உயிரை விட்டான். புயலாக மாறி வீசிய விதாரணன் என்பவனும் அந்த புனிதநீரின் வேகத்தைத் தாங்க முடியாமல் ஒடுங்கி சாய்ந்தான். பின்னர் மக்களை விழுங்கிக் கொண்டிருந்த வியாக்ரமுகன் என்ற அசுரனைக் கொல்ல நேரில் புறப்பட்டார். தன் சக்தியால் கணநேரத்தில் அவன் முன் சென்று, திறந்த வாயை அப்படியே கிழித்து, இரு கூறாக்கி அவனைக் கொன்றார். காசிராஜன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதே நேரம், தன் மக்களில் பலர் உயிர் இழந்ததையும், ஊரின் பெரும்பகுதி தீயாலும், புயலாலும் சேதமடைந்ததையும் கண்டு வருத்தப்பட்டான். அவனது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மகோற்கடர், உயிரிழந்த மக்களை எழச்செய்தார். நகரை தன் பார்வையாலேயே முன்பை விட அழகு பெறும்படி செய்து விட்டார்.இப்படி அற்புதம் புரிந்த மகோற்கடரைக் கொல்ல வேதாந்தக, நராந்தக அசுரர்கள் மேகன் என்ற அசுரனை அனுப்பினர். அவன் ஒரு ஜோதிடர் போல மாற்று உருவம் கொண்டு, காசி வந்து சேர்ந்தான். காசிராஜனை சந்தித்த அவன், அரசே! நான் ஒரு கந்தர்வன். கந்தவர்களே என்னிடம் தான் ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றால், சாதாரண மானிடர்களான உங்கள் எதிர்காலத்தை ஏடே பார்க்காமல், முகத்தைப் பார்த்தே சொல்லி விடுவேன்.
உனக்கும், உன் காசி ராஜ்யத்துக்கும் கேடு காலம் வருகிறது. உங்களோடு இருக்கிறானே... ஒரு யானை முகன். அவன் உங்களை அழித்து, நாட்டைக் கைப்பற்றவே உங்களுடன் தங்கி, நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனை உடனே ஊரை விட்டு விரட்டி விடுங்கள். அவனைக் காட்டிற்கு அனுப்புவது மிக மிக நல்லது, என்றான். காசிராஜனுக்கு அவன் ஏதோ அசம்பாவிதம் செய்யும் நோக்கத்தில் வந்துள்ளான் என்பது புரிந்து விட்டது. இருப்பினும், அவனுக்கு சாதகமானவன் போல நடித்து, மிகவும் சமயோசிதமாக, ஜோதிடரே! அப்படியானால், ஒன்று செய்யுங்கள்! நீங்களே, அந்த யானை முகத்தானை இழுத்துக் கொண்டு போய், காட்டில் விட்டு விடுங்களேன், என்றான். மேகனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவனைக் காவலர்கள் மகோற்கடர் நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் அருகே வந்த மகோற்கடர், என்ன ஜோதிடரே! நலம் தானா? என்று கேட்டதும், மேகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் ஜோதிட வேடமிட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது? என்று குழம்பிய அவனை மேலும் குழப்பினார் மகோற்கடர். ஜோதிடரே! காசி நகரத்துக்கு அழிவும், அபாயமும் இருப்பதாக, காசிராஜனை நீர் எச்சரிக்கை செய்தீராமே! அத்துடன் என்னாலும், இவ்வூருக்கு அபாயம் இருப்பதாகச் சொன்னீராமே! என்றதும், அவன் இன்னும் அதிர்ச்சியும் அடைந்தான். அரண்மனையில் காசிராஜனிடம் தனித்துச் சொன்ன விஷயங்கள் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவன் நிச்சயமாக ஒரு மாயாவி தான் என்று நினைத்தவன், நல்லவன் போல் நடித்து, மகோற்கடரே! தாங்களும் இவ்வூரில் இருப்பது ஆபத்து தான்! உமக்கு யானைகள், தண்ணீர் இவற்றால் உயிர்க் கண்டம் இருக்கிறது. இதில் தப்பினால், உம்மை விஷம் கொடுத்துக் கொன்று விடுவார்கள். இன்னும் நான்கே நாட்களில் இது நடக்கும். எனவே, நீர் காட்டிற்கு வந்து விடும், நான் அங்கு தான் போகிறேன். நீரும் என்னுடன் வந்தால், இந்த இக்கட்டில் இருந்து தப்பி விடலாம், என்றார். மகோற்கடர் நடுங்குவது போல நடித்து, ஜோதிடரே! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், என் உயிரைக் காப்பாற்ற ஆவன செய்தீர்.
உம்முடன் நான் காட்டுக்கு வருகிறேன். என் மீது அக்கறை கொண்டு ஜோதிடம் சொன்னதற்குரிய கூலியை உமக்கு நான் கொடுக்க வேண்டாமா? என்றவர், தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, அவன் கழுத்தில் போட்டார். அந்தக்கணமே, அந்த மாலையில் இருந்து நெருப்பு பற்றி மேகனை அழித்தது. இப்படி பலமுறை வந்த அசுரர்களும், மகோற்கடரின் தாயான அதிதியைப் போலவே மாறுவேடம் அணிந்து வந்த பிரமரை என்ற அரக்கியையும் மகோற்கடர் கொன்றார். இந்நிலையில், காசி நகர மக்கள் அனைவரும் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். உப்பரிகையில் வந்து நின்ற மன்னனை வணங்கிய மக்கள், மாமன்னரே! நம் ஊருக்கு வந்திருக்கும் மகோற்கடர், பல அற்புதங்கள் செய்துள்ளார். மாண்டு போன எங்களைக் கூட உயிருடன் எழுப்பினார். எனவே, அவரை எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, விருந்து படைக்க விரும்புகிறோம். தாங்கள் அனுமதியளிக்க வேண்டும், என்றனர். காசிராஜன் தயங்கினான். யாராவது ஒருவர் மகோற்கடரின் உயிருக்கு ஆபத்து விளைவித்து விட்டால், காஷ்யபருக்கு பதில் சொல்வது யார் என்ற பயத்தில், மக்களே! இதெல்லாம் சாத்தியமில்லை. ஏனெனில், மகோற்கடர் நம் ஊரிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு தினமும் ஒரு வீடு வீதம் வந்தால் கூட பல ஆண்டுகள் பிடிக்கும். இதெல்லாம், நடக்கிற காரியமா? என்றான். அப்போது மகோற்கடர் அங்கு வந்தார். காசிராஜா! நீ மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்து விடு. எல்லோர் வீட்டுக்கும் போக வேண்டியது என் பொறுப்பு, என்றார். காசிராஜனும் இதற்கு சம்மதிக்கவே, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீடுகளுக்கு திரும்பினர். தங்கள் வீட்டுக்கு வரும் மகோற்கடரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், வித்ருமை என்ற பெண் மட்டும் கவலையுடன் இருந்தாள்.