பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நேற்று, ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நடந்தது. அதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று, பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழா, ஆக., 3 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. விழாவின் 2 ம் நாள், சிவராத்திரி வழிபாடும், 3 ம் நாளான நேற்று அமாவாசை வழிபாடும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி கோயில்களில், ஒரே நேரத்தில் 18 வகையான அபிஷேகம் நடந்தது. அதன்பின், ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின், வெள்ளிக் கவசம் சாத்தி, அமாவாசை அலங்காரம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரத்துவங்கினர். மலைக்கு செல்லும் வழியில் உள்ள குறுகலான இடங்களில், நெரிசல் ஏற்பட்டது. மலையில் மொட்டைபோட்ட பக்தர்கள், குளிக்க தண்ணீரின்றி தவித்தனர். இரண்டு வாளி கிணற்று தண்ணீரை இறைத்து ஊற்ற, தனி நபர்கள் ரூ.50 கட்டணம் வசூலித்தனர். கோயில் பிரதான கிணற்றில், தண்ணீர் இல்லாததால், நீர் ஊறிய பிறகு, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டும், மோட்டார் இயக்கி 1 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கோயிலுக்கு தாணிப்பாறை, வாழைத்தோப்பு, வருசநாடு மலைப் பாதைகள் வழியாகவும் பக்தர்கள், 8 கி.மீ., தூரம் நடந்து சென்றனர். கோணத்தலைவாசல், அத்தியூத்து ஏற்றம், பச்சரிசி பாறை, வழுக்கைப்பாறை ஆகிய இடங்களில் நெரிசல் அதிகம் இருந்ததால், ஒரு இடத்தை கடக்க 2 மணி நேரத்திற்கு மேலானது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், பாறைகள் வழுக்கி பக்தர்கள் அவதிப்பட்டனர். தாணிப்பாறை, வாழைத்தோப்பு மலையடிவாரங்களில் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டியும், பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். சாப்டூர், வத்திராயிருப்பு வனப் பாதுகாவலர்கள் கருமலையான், பால்பாண்டியன் ஆகியோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினர். மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து, மலையடிவாரமான தாணிப்பாறைக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். "தினமலர் முயற்சிக்கு வெற்றி : ஆண்டுதோறும் மொட்டைபோடும் இடத்தில், ஏலதாரர்கள் ரவுடிகள் மொட்டை போடுபவர்களிடம், ரூ.150, 200 என, அடாவடி வசூலில் ஈடுபடுவர். "தினமலர் தொடர்ந்து செய்தி வெளியிட்டதின் பலனாக, முடிகாணிக்கை ஏலம் 2011 ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டுமுதல், கோயில் நிர்வாகமே நேரடியாக நாவிதர்களை நியமித்தது. இந்த ஆண்டு அந்த இடத்தில் எந்த பிரச்னையும் எழவில்லை. இதே போல்,நேற்று "தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டியதின் எதிரொலியாக, மலைப்பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.