பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
திருத்தணி :திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவில், பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனாக 1.36 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 479 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்களை செலுத்திஉள்ளனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, கடந்த மாதம், 29ம் தேதி முதல் இம்மாதம், 2ம் தேதி வரை நடந்தது. இதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக் கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். 479 கிராம் தங்கம் நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர், 150க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களைக் கொண்டு வள்ளி மண்டபத்தில் ரொக்கம், தங்கம், வெள்ளி, தகடு என, தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கம், 1.36 கோடி ரூபாய், 479 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி, ஒன்பது கிலோ பித்தளை, 30 கிலோ சின்தகடு போன்ற பொருட்கள் மூலம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ஆந்திரா "பந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், 40 சதவீதம் பேர், ஆந்திராவில் இருந்து வந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்வர். அங்கு தெலுங்கானா பிரச்னையால், கடந்த மாதம், 31ம் தேதி காலை முதல், "பந்த் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்துக் கொண்டு வரவில்லை. இதனால், உண்டியல் வசூல் குறையும் என, பக்தர்கள் மத்தியில் கருத்து நிலவியது. ஆனால், ஆந்திரா பக்தர்கள் வரவில்லை என்றாலும், இந்தாண்டு, 13 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.