பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
மதுரை: மனிதனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திய, இந்தியாவின் இதிகாசங்களை, இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, ராமாயணம், மகாபாரதத்திற்கு, புதிய அவதாரம் கொடுத்துள்ளது, நவீன உலகம்.
இதிகாசம் மற்றும் வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்தே சினிமாவின் தொடக்கம் இருந்தது. அதன் பிறகு தான், கற்பனை கதைகள் புகுந்தன. "டிவி அறிமுகமாகி, சேனல்கள் வரத்துவங்கிய போதும், இதிகாச தொடர்கள் தான், ஒளிபரப்பாகின. அந்த வரிசையில், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான, சம்பூர்ண ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை, யாரும் மறந்திருக்க முடியாது. அதுவரை புத்தகங்களில் மட்டுமே படித்து வந்த புராணங்களை, கண் முன் கொண்டு வந்த முயற்சி, வரவேற்பை பெற்றது. தூர்தர்ஷனில் 1987 ஜன.,20 ல், துவங்கி, 1988 ஜூலை 31 வரை, சம்பூர்ண ராமாயணம், 78 "எபிசோடாக ஒளிபரப்பானது. அதே போல், 1988 அக்.,2 ல் துவங்கிய, மகாபாரதத்தின் ஒளிபரப்பு, 1990 ஜூன் 24 ல் நிறைவடைந்தது. இங்கிலாந்தின் பி.பி.சி.,1 சேனலில் ஒளிபரப்பான மகாபாரதம், அங்கும் வரவேற்பை பெற்றது.
வீடியோ கேசட் வெளியானதும், தலா 25 "கேசட்"களின் வடிவில், இரு இதிகாசங்களையும் வெளியிட்டனர். ஒரு இதிகாசம் ரூ.6,000 வீதம், விற்பனையானது. அதன் பின், "விசிடி வந்ததும், 56 "விசிடிகளை கொண்ட ராமாயணம், ரூ.1,500க்கும், 47 "விசிடிகொண்ட மகாபாரதம், ரூ.1,400க்கும் விற்பனையானது. அதன் பின், "டிவிடி வெளியாகி, 20 "டிவிடிகள் கொண்ட ராமாயணம், ரூ.3,499க்கும், 20 "டிவிடிக்கள் கொண்ட மகாபாரதம் ரூ.3,499க்கும் விற்கப்பட்டது. காலத்தின் வேகமும், நவீன மாற்றத்தில் குறைந்த பொருளில் நிறைவு காணும் தேவையும் உருவானதால், இதிகாசங்களை, இன்னும் கையடக்க அளவில் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சூப்பர் "டிவிடி வடிவில், அது நிறைவேறியுள்ளது. 12.30 மணி நேரம் ஒளிபரப்பாகும், சூப்பர் "டிவிடியின் 6 "டிஸ்க்குளில், ரூ.299க்கு ராமாயணமும், 8 சூப்பர் "டிவிடிகளில், ரூ.399க்கும் மகாபாரதமும் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்டபோது, "" மகாபாரதம் தொடர், அப்போதே 1.5 மில்லியன் டாலர் செலவில் தயாரானது. தயாரிப்பு நிறுவனம், லாபத்தை எப்போதே எடுத்து விட்டது. தற்போது, இளையதலைமுறையிடம் இதிகாசங்களை கொண்டு சேர்க்கும் முயற்சியாகத் தான், புதிய வடிவத்தில், அவை வெளியாகி உள்ளன. வாங்கும் ஒவ்வொரு டி.வி.டி.,க்கும் ராமர் பட்டாபிஷேக போட்டோ இலவசம், என்றார்.