பதிவு செய்த நாள்
23
ஆக
2013
11:08
க.பரமத்தி: ஆரியூர் கருப்பணஸ்வாமி கோவில் வளாகத்தில், பன்றிகள் உலா வருவதால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆரியூரில் பிரசித்தி பெற்ற கருப்பண்ணஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சிவராத்தியின் போது நடைபெறும் திருவிழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதைத்தவிர, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் நேர்த்தி கடனாக கிடா வெட்டி, ஸ்வாமி கும்பிடுவதும் உண்டு. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி வருகிறது. இதனால்,கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பன்றிகள் குடிநீர் தொட்டிகள் உள்ள பகுதிகளில் படுத்துகொள்வதால், பாத்திரங்களை சுத்தம் செய்யமுடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பன்றிகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கருப்பண்ணஸ்வாமி கோவில் பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.