பதிவு செய்த நாள்
11
மார்
2011
03:03
மதுரை அருகில் குருவிருந்த துறை என்ற தலம் (தற்போது குருவித்துறை) உள்ளது. இவ்வூரில் சுகலன் என்பவன் தன் மனைவி சுகலையுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் பெரும் பணக்காரர்கள். பணச் செல்வம் மட்டுமின்றி, பிள்ளைச் செல்வத்தையும் கடவுள் வாரி வழங்கியிருந்தார். ஆம்... இவர்களுக்கு 12 ஆண் குழந்தைகள். பணம் படைத்தவர்கள் என்பதால் 12 பேரும் மிகச்செல்லமாக வளர்க்கப் பட்டனர். இதனால், எல்லாரும் கெட்டுக் குட்டிச்சுவரானார்கள். காலப் போக்கில், சுகலனும், சுகலையும் இறந்துபோகவே, சொத்தை 12 பாகமாக பிரித்தெடுத்தனர். அவரவர் தங்கள் பங்கை செலவழித்து தீர்த்தனர். ஒரு கட்டத்தில் எல்லாம் போய் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டனர். பசி அவர்களை வருத்தியதால், காட்டில் போய் வேட்டையாடி பிழைத்துக்கொள்ள எண்ணி அங்கு சென்று தங்கினர். தினமும் மிருகங்களை வேட்டையாடி உணவருந்தினர். ஒரு சமயம், இவர்கள் சென்ற வழியில் ஒரு துறவி கால் மடக்கி தவத்தில் இருந்தார். அவர் தான் தேவகுரு பிரகஸ்பதி. அவர் யாரென்பதை அறியாத அந்த சகோதரர்கள் அவர் மீது மணலை வாரி இறைத்தனர். கற்களை வீசினர். அவரைச் சுற்றி நின்று ஆடிப்பாடி கேலி செய்தனர்.
அவர்களது இடைஞ்சலால் பிரகஸ்பதி தவம் கலைந்து எழுந்தார். மூடர்களே! நீங்கள் செய்த இந்த செயல் கண்டனத்துக்குரியது. படிப்பறிவில்லாதவன் கூட பிறரது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் உரிமையில்லாதவன். நீங்களோ, அமைதியாய் இருந்த எனக்கு இடைஞ்சல் செய்தீர்கள். எனவே, எல்லாரும் இந்தக்காட்டிலுள்ள பன்றியின் வயிற்றில் பிறப்பீர்களாக! என சாபம் கொடுத்தார். அமைதியாக இருப்பவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் இடைஞ்சல் செய்பவர்கள் பன்றியாகப் பிறப்பார்கள் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக, கல்லூரிகள் துவங்க உள்ள இந்த வேளையில், ராக்கிங் செய்வது எவ்வளவு தவறு என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ராக்கிங் செய்பவர்கள் பன்றிகளாகப் பிறப்பது உறுதி. அந்த சகோதரர்கள் இந்த சாபத்தை எதிர்பார்க்கவில்லை. தங்கள் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டார்கள். குழந்தைகளே! உங்கள் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால், தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே ஆக வேண்டும். பன்றிகளாகப் பிறக்கும் உங்களுக்கு சரியான உணவும் கிடைக்காது. பசியுடனேயே திரிவீர்கள். இறுதியாக, மதுரையில் உறையும் சோமசுந்தரரின் அருளால் உய்வடைவீர்கள். மேலும், தவறை உணர்ந்த உங்களுக்கு மன்னனின் அவையில் அமைச்சர் பொறுப்பும் கிடைக்கும், என்றார்.
அந்த சகோதரர்கள் அங்கு சுற்றித் திரிந்த பன்றியின் வயிற்றில் பிறந்தனர். மன்னன் ராஜராஜன் அந்தக் காட்டிற்கு வேட்டையாட வந்தான். காட்டுப்பன்றிகளை அவன் வேட்டையாட எண்ணினான். காட்டுப்பன்றிப் படையின் தலைமை பன்றிக்கு இந்த தகவல் கிடைத்தது. எப்படியாவது மன்னனின் பிடியில் இருந்து தப்ப அது திட்டமிட்டது. ஆனால், அவற்றால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்டுப் பன்றிகள் மனிதர்களைத் தாக்கும் திறனுடையவை. எனவே, அவை ஒட்டுமொத்தமாகக் கூடி மன்னனின் படையைத் தாக்கின. ஆனால், ஆண்பன்றிகளின் தலைமைப் பன்றியை மன்னன் கொன்றுவிட்டான். பின்னர், பெண் பன்றியின் தலைமையில் மற்ற பன்றிகள் போரிட்டன. பெண் பன்றியைக் கொல்வது தவறு என்பதால், மன்னன் ஒதுங்கிக் கொண்டான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் அங்கு வந்த ஒரு வேடன். அரசே! என் பெயர் சருச்சரன். உங்கள் யுத்த தர்மப்படி பெண் பன்றியை நீங்கள் கொல்லாமல் இருக்கலாம். நானோ வேடன், எனக்கு எந்த மிருகமாக இருந்தாலும் ஒன்று தான். அந்த பன்றியைக் கொல்ல அனுமதிக்க வேண்டும், என்றான். மன்னனும் தலயைசைக்க பெண் பன்றியைக் கொன்றுவிட்டான். தாயையும், தந்தையையும் இழந்த குட்டிப்பன்றிகள் காட்டில் அனாதையாகத் திரிந்தன. பாலில்லை, உணவில்லை. அவை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல, பசியால் அவை கதறின. இவற்றின் அவலக்குரல் சுந்தரேசப் பெருமானின் காதுகளில் விழுந்தது. வராஹ முகத்துடனும், மனித உடலுடனும் கூடிய பன்றியாக உருவெடுத்து வந்தார். குட்டிகளுக்கு பாலூட்டினார். அவை பசி தீர்ந்து மகிழ்ந்ததுடன், முந்தைய வடிவையும் பெற்றன.