பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
டேராடூன்: உத்தரகண்டில் பெய்த பேய் மழையால், சேதமடைந்த கேதார்நாத் சிவன் கோவிலை சீரமைக்க, வளர்ச்சி ஆணையத்தை தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகண்டில், ஜூன் மாதம் வரலாறு காணாத பேய் மழை பெய்தது. இதனால், முக்கிய வழிபாட்டுத் தலமான, கேதார்நாத் கோவில், பலத்த சேதமடைந்தது. சேதமடைந்த பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் கேதார்நாத் புனித யாத்திரையை ஒழுங்குபடுத்தவும், சேதமடைந்த இடங்களில் புனரமைப்பு பணிகளுக்கான திட்டமிடல் மற்றும் மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொள்ளவும், "கேதார்நாத் வளர்ச்சி ஆணையம் என்ற புதிய ஆணைத்தை அமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் இந்த ஆணையத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம், ஆண்டு தோறும் கேதார்நாத் கோவிலை தரிசிக்க வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, யாத்திரை தொடங்கும் முன், அதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்வது போன்ற முக்கிய பணியாற்றும் என, கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.