பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 60 கிலோ எடையில் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ எடையில், மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது. திருச்சியில், பொதுமக்கள் நேற்று, விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர். பெரியக்கடை வீதி, என்.எஸ்.பி., ரோடு, பீமநகர், உறையூர், தென்னூர் போன்ற பகுதிகளில், ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில், களிமண்ணை அச்சில் வார்த்து, உடனடியாக விநாயகர் சிலைகள் தயாரித்து விற்கப்பட்டன. இதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். திருச்சி மாநகரில், 182, புறநகரில், 683 என, திருச்சி மாவட்டம் முழுவதும், 865 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, உச்சிப்பிள்ளையாருக்கு மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது. 150 கிலோ எடையில் மெகா சைஸ் கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு, அதை அர்ச்சகர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு, டோலி கட்டி தூக்கிச் சென்றனர். பாதி மாணிக்க விநாயகருக்கும், மீதம் உச்சிப்பிள்ளையாருக்கும் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உச்சிப்பிள்ளையாரையும், மாணிக்க விநாயகரையும் தரிசித்தனர். இரவு பால விநாயகர் அலங்காரத்தில், விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, தினமும் மாலை நாகா பரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, வல்லப கணபதி, குமார கணபதி, சித்தி புத்தி கணபதி, நடன கணபதி என, 13 நாட்கள் விநாயகர் பல்வேறு அலங்காரத்தில், இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.