பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
சென்னை:சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று கோலாகலமாகவும், அமைதியாகவும் நடந்தது. 1,400 பிரமாண்ட விநாயகர் சிலைகள், கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்திக்கு, பிரமாண்ட சிலைகள் வைத்து வழிபடுவது வட மாநிலங்களில் பிரபலம். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் பிரமாண்ட சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 9ம் தேதி கொண்டாடப்பட்டது.இதற்காக, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சென்னை, புறநகர் பகுதிகளில் போலீஸ் அனுமதியுடன், 1,700க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டன. சிவசேனா அமைப்பினர் வைத்த சிலைகள், நேற்று முன்தினம் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வைத்த சிலைகளின் ஊர்வலம் நேற்று நடந்தது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் என, ஐந்து இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.லாரிகள், டிரக்குகள், வேன்கள் மூலம் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக, மேள தாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டன. தென் சென்னை பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையிலும் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கத்திற்கு மட்டும், 1,000த்துக்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டன. மூன்று அடி முதல், 13 அடி வரையிலான சிலைகள் கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள், கடற்கரையோரத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு கடலிலிருந்து, 300 முதல் 500 மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.சிறு சிலைகள் படகுகள் மூலமும், பெரிய சிலைகள் பிரத்யேகமாக நிறுவப்பட்ட கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டன. பெருமளவு சிலைகள் இந்த பகுதிக்கு வந்ததால், சாந்தோம் முதல் சீனிவாசபுரம் வரை, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவிலும், சிலை கரைக்கும் பணி நடந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. சென்னை துறைமுகம் கிரேன் வசதி செய்து கொடுத்தது. புறநகர் பகுதிகளாக செங்குன்றம், சோழவரம், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், பாப்புலர் எடை மேடை, திருவொற்றியூர் பகுதிகளில் கரைக்கப்பட்டன. சென்னையில், நேற்று, 1,400க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நல்ல முயற்சி:சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, போலீசார் பிரத்கேய ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிலைகளிலிருந்த, மாலைகள், துணிகள் எல்லாம் மீனவர்கள் உதவியுடன் தனியாக அகற்றப்பட்டு, அதன் பின் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக, நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, சென்னை முழுவதும், 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாகவும், மிக அமைதியாகவும் நடந்தது.கடந்த ஆண்டு, வட சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் மசூதி வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்றபோது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முறை இப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாகவே, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று நடந்த விநாயகர் ஊர்வலத்தில், முஸ்லிம்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.