பதிவு செய்த நாள்
14
மார்
2011
05:03
ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன். சரவணா! அன்றொரு நாள் எனது நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த சுடரில் பிறந்த நீ, மக்கள் நலனுக்காக இந்த மதுரையில் பிறக்க வேண்டும். தடாதகைபிராட்டியாரின் வயிற்றில் நீ கருவாவாய், என்றார். முருகப்பெருமானும் தந்தையின் கட்டளைக்கு பணிந்து, தடாதகைபிராட்டியாரின் மணிவயிற்றில் குழந்தையாகத் தங்கினார். தான், கர்ப்பமுற்றதை அறிந்த தடாதகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவரின் மார்பில் சாய்ந்து, இந்த விஷயத்தை தெரிவித்தாள். அரசி தடாதகை கர்ப்பமுற்றதை அறிந்த அமைச்சர் சுமதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் மதுரையில் பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மீனாட்சி கல்யாண உற்சவம் போல, ஊரெங்கும் மாவிலை தோரணம் கட்டி, இனிப்புகள் சமைத்து, தானம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. கர்ப்பவதிக்கு புளிப்பு வகை மிகவும் பிடிக்குமே! இதனால் ருசியான புளியோதரையை சமைத்துக் கொடுத்தனர். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமே என்பதற்காக குங்குமப்பூ கலந்த பால், விதவிதமான பழரசங்கள் கொடுக்கப்பட்டன.
மிக முக்கியமாக வேத விற்பன்னர்கள் காலையும் மாலையும் வரவழைக்கப் பட்டு அரிய ஆன்மிகத் தத்துவங்கள், போதனைகள், கதைகள், இறைவனின் திருநாமங்களின் மகிமை ஆகியவை சொல்லப்பட்டன. இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் காலத்தில் கர்ப்பவதிகள் டிவியின் முன்னால் அமர்ந்து, கண்ட கண்ட நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதும், உணர்ச்சிவசப் படுபவதும், ஆபாசமும், வன்முறையும் கலந்த பாடல்கள், திரைப்படங் களைப் பார்த்து அவற்றையே விரும்பும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். தாங்கள் தவறு செய்துவிட்டு, பிள்ளைகள் கெட்டலையும் போதும், ஒழுங்காகப் படிக்காமல் இருக்கும்போதும் அவர்கள் மீது தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை என பழி போடுகிறார்கள். கர்ப்பவதிகள் தயவுசெய்து டிவி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிறந்த ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். யாருடைய துணையுடனாவது கோயில்களுக்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். இப்படி செய்தால் மிகச்சிறந்த குழந்தைகள் பிறக்கும். இப்படியாக, தடாதகை பிராட்டியாரின் கர்ப்ப கால முடிவில், அவளுக்கு வளைகாப்பு, பூச்சூடல் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப் பட்டன. மதுரை வாழ் மக்கள் தங்கள் அரசியாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள், வடை வகைகளை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு திங்கள்கிழமை, நிறைந்த திருவாதிரை நட்சத்திரம், சகல கிரகங்களும் சுபவீட்டில் இருந்த சுபயோக சுபவேளையில் தடாதகை பிராட்டியார் தன் செல்வமகனைப் பெற்றெடுத்தாள். அவள் மட்டுமா! ஊரும் உலகமும் மகிழ்ச்சியடைந்தது. சுந்தரேச பாண்டியன் தன் மகனை பார்க்க வந்த போது, மரகதவல்லியான தடாதகை பிராட்டியாரின் பச்சைக் கன்னங்களில் சிவப்பு இழையோடியது. வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றுசேரும் நேரத்தில் தான் பெண்களுக்கு அழகே கூடும் போலும்!
சுந்தரேச பாண்டியன் தன் மனைவியின் பேரழகையும், செக்கச் சிவக்க பிறந்த மகனின் பேரழகையும் ஒருசேர ரசித்தார். குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. உக்ரவர்மன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவுக்கு தாய்மாமன் வந்தாக வேண்டுமே! திருமால் தன் கருட வாகனத்திலும், பிரம்மா அன்னவாகனத்திலும் அவரவர் தேவியரான ஸ்ரீதேவி, பூதேவி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தனர். தேவ குரு பிரகஸ்பதி குழந்தையை ஆசிர்வதித்து, உரிய வயது வந்ததும் தானே நேரில் வந்து குழந்தைக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதாகவும் சுந்தரேச பாண்டியனிடம் தெரிவித்தார். ஐந்து வயதில் உக்ரவர்மனுக்கு பூணூல் அணியும் வைபவம் நடந்தது. தேவகுரு பிரகஸ்பதி பாடங்களை ஆரம்பித்தார். எட்டுவயதிலேயே சகல கலைகளையும் கற்றான் உக்ரவர்மன். தந்தை சுந்தரேசபாண்டியன், அவனுக்கு பாசுபதாஸ்திரம் எய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். உக்ரவர்மனுக்கு 16 வயதானது. அவனுக்கு திருமணம் செய்து வைப்பதா அல்லது பட்டம் சூட்டுவதா என்று சுந்தரேசபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் யோசிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் சுமதியுடனும், வேத பண்டிதர்களுடனும் இதுபற்றி கலந்தோலசித்தனர். திருமணமே சிறந்த வழி என அவர்கள் ஒருமித்த முடிவெடுத்துக் கூறவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.