பதிவு செய்த நாள்
30
செப்
2013
10:09
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு, 38,529 கோவில்கள் உள்ளன. சமீபகாலமாக கோவில்களில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, கோவில் பாதுகாப்புக்கு என, அமைக்கப்பட்ட கோவில் பாதுகாப்பு படையினரின் போதுமான ஆர்வமின்மையே என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவில்களில் உள்ள, உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், உண்டியல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக, திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில், 1,000 இரண்டாம் நிலை காவலர்கள், 3,000 முன்னாள் ராணுவ படைவீரர்கள் ஆகியோரை நியமனம் செய்ய, அரசு அனுமதி அளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பாதுகாப்பு படையினரின எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. இதனால்,கோவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், 1,500லிருந்து, 5 ஆயிரமாக, கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இருப்பினும், முன்னாள் ராணுவ வீரர்கள், கோவில் பாதுகாப்பு படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களோடு சேர்ந்து, மாவட்டத்தில் உள்ள, கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த செயல் அலுவலர்களிடம், கோவில் உடைமைகளை பாதுகாப்பதற்கான, திட்டங்களில் ஈடுபட, வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -