பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
கோவை: கோயமுத்தூர் பெங்காளி சமாஜ் சார்பில், நவராத்திரி விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, காளி சிலைகள் தயாரித்து, பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை போலவே, நவராத்திரி விழாவும் கோவையில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. கோவை பெங்காளி சமாஜத்தினர், கோவையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் 11 அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரமாண்டமான காளி சிலையை, தயாரிக்கின்றனர். அதே போல் விநாயகர், முருகர், மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இவையனைத்தும், சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மாசடையாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. பிரமாண்டமான சிலைகள் தயாரிப்புப்பணியில் மேற்குவங்க கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும். அக்., 11ம் தேதி சிலைகள் சுகுணா திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 14ம் தேதி வரை, தினமும் நைவேத்தியம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், இசை, நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. விழா நிறைவடைந்து மூன்று நாட்களுக்குப் பின், நான்கு சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. பெங்காளி சமாஜத்தை சேர்ந்த சந்தன் கூறுகையில், ""மேற்குவங்கத்தில் துர்கா அம்மா ( காளிதேவி) பிரசித்தி பெற்ற கடவுள். நவராத்திரி விழாவில் கடைசி நான்கு நாட்கள் காளிதேவியை பிரதிஷ்டை செய்து மக்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ""அந்த நடைமுறையை கோவையிலும் பின்பற்றுகிறோம். இதற்காக, மேற்கு வங்கக் கலைஞர்களை வரவழைத்து சிலைகளை செய்கிறோம், என்றார்.