மதுரை: விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் நவராத்திரி கலை விழா கொலு தொடங்கியது. அம்மன் சன்னதி வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட கொலுவில் 16 அரங்கங்கள் அமைக்கப்பட்டன. தினமும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 9 நாட்களாக நடைபெற்ற கொலு அலங்காரத்தின் நிறைவாக நேற்று பகலில் அம்மன் உச்சிக்கால பூஜை வேளையில் அம்மன் சன்னதியிலிருந்து புறப்பாடாகி ராணிமங்கம்மாள் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பாடாகி அம்மன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியை அடைந்தார். விஜயதசமியை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மாலை வீணை வழிபாடு நடைபெற்றது. இதில் வீணை இசைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் வீணையுடன் பங்கேற்றனர். அம்மன் பக்திப் பாடல்களை 108 வீணையிலும் ஒரே நேரத்தில் வாசித்தது மெய்சிலிர்க்க வைத்தது. இதில் வீணை வழிபாடு மன்றம், வேதமன்றம், வேணுகானம் குழல் இசை சங்கம், மதுரை நாட்டியாஞ்சலி குழுமம் ஆகியவை பங்கேற்றன.