பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
பள்ளிப்பட்டு: நாதாதீஸ்வரர் கோவில் வளாகத்தை சுற்றிலும், புதர் மண்டிக் கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தில் உள்ள நாதாதீஸ்வரர் கோவில், திருத்தணி முருகன் கோவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாதாதீஸ்வரர் கோவில், திருமண தலமாக விளங்குவதால், ஆண்டு முழுவதும் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், திருமணங்கள் நடந்து வருகின்றன. கோவில் வெளிப்பிரகாரம் மற்றும் கோவில் குளம், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. வெளிபிரகாரத்தில், வலம் வர முடியாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குளம் துார் வாரப்படாததால், கோரை செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், குளம் பொலிவிழந்து, பாசி படர்ந்து காணப்படுகிறது. எனவே, திருத்தணி தேவஸ்தான நிர்வாகம், நாதாதீஸ்வரர் கோவில் வளாகத்தை சீரமைக்கவும், குளத்தை துார் வாரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.