சபரிமலையில் பிரசாதம் கொடுக்க புதுமுறை: கேரள ஐகோர்ட் தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2013 10:11
ஸ்ரீகோயிலில் இருந்து நேரடியாக பிரசாதம் கொடுக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு விதித்த தடைக்கு கேரள ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சபரிமலையில் ஸ்ரீ கோயிலில் முன்புறம் செல்லும் விஐபி மற்றும் பக்தர்களுக்கு கோயிலில் இருந்து பூஜாரி இலையில் திருநீறு, சந்தனம், பூ உள்ளிட்ட பிரசாதம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அண்மையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஸ்ரீகோயிலில் இருந்து பிரசாதம் கொடுப்பதை தடை செய்திருந்தார். இதனால் கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறந்தது முதல் கோயிலின் முன்பகுதியில் எவருக்கும் பிரசாதம் கொடுக்கப்படவில்லை. இதனால் பூஜாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மேலும் முன்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொச்சியை சேர்ந்த ராமன்கர்த்தா என்பவர் தேவசம்போர்டு உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாதம் கொடுக்க தேவசம்போர்டு விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். கோயில் களில் பூஜாரிகள் பிரசாதம் கொடுப்பதை தடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.