சபரிமலை: சபரிமலையில் தொடரும் மழையால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கியது முதல் ஒரு சில நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 12 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் தங்கியிருந்த பக்தர்கள் எங்கு செல்வது என அறியாமல் திணறினர். மழை நின்ற பின்னரும் தண்ணீர் வடிய நீண்ட நேரம் எடுத்தது. இதனால் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்கமால் நின்று கொண்டிந்தனர். அதிகாலையில், நான்கு மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் முடித்து பலர் ஊருக்கு புறப்பட்டனர். நேற்று மதியமும் மழை தொடர்ந்தது. பகல் 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரண்டு மணி வரை நீடித்தது. தொடர்மழையால் சன்னிதான சுற்றுப்புறங்கள் சகதியாக உள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.