பதிவு செய்த நாள்
04
டிச
2013
10:12
நாகர்கோவில்: கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மரியே வாழ்க... கோஷத்துடன் மாதா தேர்பவனி நடந்தது. உலகின் புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள சவேரியார் கோயில் ஆகும். கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்... என பக்தர்களால் போற்றப்படும் இந்த ஆலயத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சிறப்புமிக்க இந்த சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் திருப்பலியும், ஆடம்பர கூட்டு திருப்பலி, சிறப்பு நற்கருணை, ஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 8ம் திருவிழாவில் ஆடம்பர கூட்டு திருப்பலி, தேர்பவனி ஆகியவை நடந்தன. மலர் மாலைகளாலும், வண்ணமிகு சீரியல்களாலும் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. முதல் தேரில் காவல் சம்மனஸ் சொரூபம், 2வது தேரில் செபஸ்தியார் சொரூபம், 3வது தேரில் புனித சவேரியார் சொரூபம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
பேராலயத்தில் துவங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர்பவனியின்போது பக்தர்கள் மாலைகள், மெழுகுவர்த்தி, உப்பு, நல்லமிளகு பாக்கெட்டுகளை காணிக்கையாக வழங்கினர். 9ம் நாளில் திருப்பலி, மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டார் மறைமாவட்ட பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடந்தது. பின்னர் தேர்பவனி நடந்தது. இதில் காவல் சம்மன சானவர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், தேவமாதா சொரூபங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது பக்தர்கள் மரியே வாழ்க... என எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தன. தேர்பவனியின்போது ஏராளமான பக்தர்கள் கும்பிட்டு நமஸ்காரம் நேர்ச்சை செலுத்தினர்.
10வது மற்றும் நிறைவு நாள் திருவிழாவான நேற்று அதிகாலையில் திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தது. பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஜாண் ராபர்ட் ஜூலியஸ், மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள், பக்தர்கள் பங்களிப்புடன் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மலையாளம், தமிழ் திருப்பலிகளும் தேர்பவனியும் நடந்தன. சவேரியார் பேராலய விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கேரளா, மற்றும் பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால் கோயில் வளாகம், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எங்கும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கோட்டார் சவேரியார் கோயில் ஜங்சனில் இருந்து செட்டிக்குளம், மற்றும் மீனாட்சிபுரம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் வரை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தை சேர்ந்தோறும் பிற பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தூய சவேரியாரை வேண்டி மனமுருகி வேண்டி நிற்பதை காணமுடிந்தது. ஆலய வளாகம், மற்றும் சுற்றுப்புற பகுதிகள் எங்கும் வண்ணமிகு விளக்குகளால் மின்னொளியில் ஜொலித்தன. பக்தர்கள்... தங்கள் தேவைகள், வரங்களை கேட்டவாறு... புனித சவேரியாரை வேண்டி நின்றனர். பேராலய விழாவில் பங்கேற்று மனமுருகி வேண்டிய மனநிறைவோடு... பக்தர்கள் பயணிப்பதை காணமுடிந்தது.