பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
ஒரு ஊருக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றி அன்றைய புராணங்களிலேயே சொல்லி வைத்துள்ளனர். காடுகள் எல்லாம் செழிப்பாக வளர்ந்துள்ளதா என்று குசேலரிடம் கண்ணபிரான் கேட்டதன் மூலம் மழைக்கு முக்கியத்துவம் தந்திருப்பதை அறிய முடிகிறது.இதையடுத்து குருகுலத்தில் குசேலருடன் பழகிய விதம், சென்ற இடங்கள் குறித்ததெல்லாம் கண்ணபிரான் நினைவு கூர்ந்தார். பழைய நண்பர்களிடம் பேசுவது போன்ற சுகம் உலகிலேயே கிடையாது. அந்த இனிமையான நேரத்தை இருவருமே ரசித்தனர்.இப்படியாக, பேசிக்கொண்டிருந்த கண்ணபிரான், குசேலரிடம், குசேலா! இவ்வளவு தூரம் என்னை தேடி வந்திருக்கிறாய்! வெறும் கையோடா வந்திருப்பாய்! அந்தக் காலத்தில் நாம் குருகுலத்தில் படிக்கும் போதே இணைந்து பல பலகாரங்களைச் சாப்பிடுவோம். இப்போது எனக்கு என்ன பட்சணம் கொண்டு வந்திருக்கிறாய்! உடனே அதைக் கொடு! சிறுவயதில் கூட நீ பலகாரங்களை எனக்கு கொண்டு வந்து கொடுப்பாய். அதன் ருசி அலாதியாக இருக்கும். இப்போதும் கொண்டு வந்திருப்பாய், எடு, எடு என உரிமையோடு சொல்வது போல நடித்தார் மாயக்கண்ணன். இந்தக் கண்ணனைப் போல மாய அவதாரம் உலகில் கிடையாது. பொய்க்கென்றே பிறந்த அவதாரம் என்று இதைச் சொல்லி, இவரை நான் வணங்கமாட்டேன். எல்லா வகையிலும் சிறந்த ராமனையும், பக்திக்கே எடுத்துக்காட்டான நரசிம்மரையும் மட்டுமே வணங்குவேன் என அடம் பிடிப்பவர்களும் உண்டு.குசேலர் அவல் தான் கொண்டு வந்திருக்கிறார், அதையும் ஒரு கிழிந்த துணியில் சுற்றி வந்திருக்கிறார் என்பது கண்ணனுக்குத் தெரியாதா என்ன! இருந்தாலும், அவர் ஏதோ லட்டும் அல்வாவும் கொண்டு வந்திருப்பார் என்பது போலவும், அதைச் சாப்பிட ஆவல் கொண்டது போலவும் நடிக்கிறார் என்றால், அந்த மாயவனின் லீலைகளை என்னவென்பது!
மகாபாரதத்தில், தன்னை நாடிய பாண்டவர்களின் வசதிக்காக அமாவாசை நாளையே மாற்றியவர் அல்லவா அவர்! அதோடு விட்டாரா கண்ணபிரான். குசேலா! உன் அருமையான மனம் பற்றி எனக்குத் தெரியாதா? நான் சரியான சாப்பாட்டு பிரியன். இவனுக்கு, ஏதாவது கொண்டு போகாவிட்டால் நம்மை பாடாய் படுத்திவிடுவான் என்பதை அறியாதவனா நீ! அதனால், சுவையான சிற்றுண்டிகள் தயார் செய்து கொண்டு போகலாம் என முடிவெடுத்து அதை தயாரித்து வந்திருப்பாயே! அல்லது உன் மனைவி தான் உன்னை வெறும் கையோடு அனுப்பியிருப்பாளா! கொண்டு வந்ததை எடு எடு, என்று அவசரப்படுத்தினார்.இந்தக் கண்ணன் இருக்கிறானே! இவன் நாம் அவனுடைய சன்னதிக்குச் சென்றால் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என பார்ப்பான். இவனுக்கு நெய் பலகாரம் என்றால் உயிர். வெண்ணெய் என்றால் பானைக்குள்ளேயே குதித்து விடுவான். சின்ன வயதில் ஆயர்பாடியில் வெண்ணெய்க்காக இவன் ஆடாத ஆட்டமா! எத்தனை கோபியர் வீட்டில் புகுந்து வெண்ணெய் திருடியிருப்பான்! இந்த வெண்ணெய் திருட்டுக்குள் எவ்வளவு பெரிய தத்துவம் புதைந்து கிடக்கிறது தெரியுமா! வெண்ணெய் என்பது பக்தி, உறி என்பது மனம். நம் மனதிற்குள் புகுந்து, அதில் உறைந்து கிடக்கும் வெண்ணெயைக் கிளறி எடுக்கிறானாம்! வெண்ணெயை நவநீதம் என்பர். இதனால் அந்தப் பெயரையே தனக்கு சூடிக்கொண்டான். நவநீதகிருஷ்ணன் என்று அவனை செல்லமாக அழைப்பது இந்தப் பெயரால் தான்! இப்போது குசேலரின் மனதில் புகுந்து அவருடைய மனதில் ஊறிக்கிடக்கும் பக்தியை உலகறியச் செய்வதற்காக இப்படி ஒரு நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கிறான்! இது புரியுமா குசேலருக்கு! அவருக்கு கை, கால்கள் வெடவெடுத்தன.
ஊரில் இருந்து ஒரு கிழிந்த துணியில் கொண்டு வந்த அவலை இவனுக்கு எப்படி கொடுப்பது! இவன் பலகாரம் என்கிறான், பட்சணம் என்கிறான், அது மட்டுமல்ல! இவன் தன் மனைவியர் புடைசூழ அமர்ந்திருக்கிறான்! அவர்களெல்லாம், நாம் கொடுக்கும் அவலைப் பார்த்து, எள்ளி நகையாடுவார்கள்! உம் நண்பன் இவ்வளவுதானா! என்று கேலி செய்வார்கள். அனலுக்குள் அகப்பட்ட புழு போல் நெளிந்தார் குசேலர். மனதுக்குள் அந்தக் கண்ணனையே பிரார்த்திக்க ஆரம்பித்தார்.கண்ணா! இதென்ன சோதனை! பாலும் பழழும் பட்சணங்களும் உன் அரண்மனையில் இல்லாததா! நீ கொடுக்கும் பிரசாதத்துக்காக இங்கே ஒரு கூட்டமே காத்துக்கிடக்கிறதே! செல்வச் சீமானான உனக்கு, ஒரு கந்தலில் கொண்டு வந்த அவலை எப்படி கொடுப்பேன். இனிய பாலை தினமும் குடிப்பவனுக்கு புளித்த கஞ்சியைக் கொடுப்பேன்! என்னைச் சோதிக்காதே, என்றவாறு மனம் பதைத்தார். தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த அவல் முடிப்பு வெளியே தெரியாமல், கண்ணன் தனக்கு கொடுத்த அங்கவஸ்திரத்தைக் கொண்டு மூடி வைத்துக் கொண்டார்.ஆனால், அந்தக் கண்ணன் விட்டானா!ஏ குசேலா! அங்கே ஏதோ திருட்டுத்தனம் செய்கிறாயே! அங்கவஸ்திரம் கொண்டு எதையோ மூடுகிறாயே! என்ன ஒளித்து வைத்திருக்கிறாய், கொடு, கொடு, என்றார்.குசேலரோ அப்படியே தன்னைக் குறுக்கிக் கொண்டு கண்ணனின் பார்வையில் அந்த முடிச்சு படாமல் பார்த்துக் காண்டார். கண்ணன் அவரது கைகளைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு, ஆடையில் மறைத்து வைத்திருந்த முடிச்சை உருவி எடுத்து விட்டார்.பரபரப்புடன் முடிச்சை அவிழ்த்தார்.உள்ளே அவல் இருந்தது. குசேலா! நீ பலே ஆள்! இந்த செல்வந்தனின் அரண்மனையில் எல்லாம் இருக்கும்! அவல் இருக்காது என்று குறிப்பறிந்து கொண்டு வந்திருக்கிறாயே! சரியான ஆளப்பா நீ! என்றார்.