பதிவு செய்த நாள்
02
ஜன
2014
11:01
ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் பகுதியில், 13ம் நூற்றாண்டில், "ஜல்லிக்கட்டு நடந்துள்ளது என்பதற்கான ஆதாரமாக, நடுகல் கிடைத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, "ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காகவே வளர்க்கப்படும் காளைகளை, அடக்கும் வீரர்களுக்கு, பணம், நகை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பட்டுத்துறை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சிவசங்கராபுரம் கிராமத்தில், பெரியசாமி கோவில் அருகே, ஐந்து அடி உயரம், ஐந்து அடி அகலத்தில், நடுகல் ஒன்று உள்ளது. அந்த நடுகல்லில், முரட்டுக்காளையின் கயிற்றை வீரர்கள் பிடித்து செல்லும் போது, பெண் ஒருவரை, அந்த காளை முட்டுகிறது. அதன் அருகில், ராஜா, ராணி உருவங்களும், கீழ் பகுதியில், இயல், இசை, நாடகம் நிகழ்ச்சி நடத்துவது போலவும், சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முத்துசாமி, நமது நிருபரிடம் கூறியதாவது: கடந்த, 13ம் நூற்றாண்டில், விஜய நகர பேரரசு ஆட்சியில், வானகோராயர் மன்னன் ஆட்சி புரிந்த போது, ஆத்தூர், தலைவாசல் பகுதியில், "ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. அதற்கு ஆதாரமாக, சிவசங்கராபுரத்தில் உள்ள நடுகல்லில், "ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடர்பான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் எண்ணெய் வைத்து சென்ற, கர்ப்பிணி பெண், காளை ஒன்று முட்டி தள்ளியதில் இறந்துள்ளார். அதனால், அவ்வூர் மக்கள், இவ்விடத்தில் நடுகல் அமைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவில், இயல், இசை, நாடகங்களும் நடத்தப்பட்டது, இந்த நடுகல் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. தமிழர்களின் பாராம்பரியத்தை எடுத்துரைக்கும் இந்த நடுகல்லை, பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.