விண்ணுலக தேவர்கள் இறைவனை வழிபடுவதாக சில திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தேவர்களும் ரிஷிகளும் வழிபடும் திருக்கோயில்களில் மனிதர்கள் அவ்வேளையில் வழிபட வாய்ப்பு கிடையாது. மங்களகிரி பானக நரசிம்ம சுவாமி கோயிலில் பகல் பன்னிரண்டு மணி வரை தான் மனிதர்கள் வழிபாடு. அப்புறம் தேவர்கள் வழிபாட்டிற்காக மூடப்பெறும். மலைப்பாதை மறு நாள் காலையில்தான் திறக்கப்பெறும் படைவீட்டிற்கு அருகில் உள்ள அத்திமலையில் உள்ள வேணு கோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை மட்டும்தான் மக்கள் தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் சப்தரிஷிகள் மட்டுமே பூஜை செய்வதால் மற்றவர்கள் தரிசிக்க இயலாது. பத்ரிநாத் கோயிலில் ஆறுமாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனிதர்கள் பூஜை. பனிக்காலத்தில் கோயில் மூடப்படும்போது தேவர்களின் சார்பில் நாரதர் பூஜை செய்கிறார். நாரதர் விக்ரகம் கருவறையில் உள்ளது. வாரணாசி விசுவநாதர் கோயிலில் தினசரி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சப்த ரிஷிகள் பூஜை நடைபெறும். அவ் வேளை மனிதர்கள் பூஜிக்க அனுமதியில்லை. ஏழு அர்ச்சகர்கள் ஏழு ரிஷிகளைப்போல் ஆராதனை செய்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் அர்த்த சாம பூஜை தேவேந்திரன் செய்வதாகக் கருதப்படுவதால் ஒருநாள் மாலை பூஜை செய்த அர்ச்சகர்களை மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை.