கும்பகோணம்: 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.