குழந்தை வரம் கேட்டு.. மடிப்பிச்சை ஏந்தி பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 11:04
உளுந்தூர்பேட்டை: மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் அக்னி கரக உற்சவத்தில் குழந்தை வரம் கேட்டு பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டனர். உளுந்தூர்பேட்டை தாலுகா மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் அக்னி கரக உற்சவம் நடந்தது. கடந்த 10ம் தேதி இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 11ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. 12ம் தேதி 10 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு செடல் மரம் நிலை நிறுத்தலும், மதியம் 1 மணிக்கு காவடி பூஜையும், மதியம் 2 மணிக்கு காத்தவராயன் வீதியுலா நடந்தது. மதியம் 3.30 மணிக்கு அக்னி கரகம் கெடிலம் தென்பெண்ணையாற்று கரையில் இருந்து புறபட்டு கோவிலை வந்தடைந்தது. அக்னி கரக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. உற்சவத்தின்போது குழந்தை வரம் கேட்டு பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டனர். இரவு 7 மணிக்கு ஆட்டு செடல் நடந்தது.