குன்னூர் : ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவ விழா விமரிசையாக நடந்தது.ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலில் இந்த ஆண்டு உற்சவம் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. 20ம் தேதி காப்பு கட்டப்பட்டது. 21ம் தேதியில் இருந்து 3ம் தேதி வரை பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடந்தது.முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேக குழுவினரின் மகா அபிஷேகம், பகல் 12:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று மதுரை வீரன் பூஜை, நாளை கரக உற்சவம், 8ம் தேதி விடையாற்றி உற்சவம், 9ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.