மயிலாடுதுறை: நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரியில், திருமணத் தடை உள்ளவர்கள், வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கு திருகல்யாண விழா மே 4ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை நடந்தது. நாகை மாவட்டம் குத்தாலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வர் கோவில் உள்ளது. அப்பர்,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோயிலில் கல்யாணசுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் அம்பிகையை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. இறைவனே பூலோகத்திற்குவந்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் இந்த கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் திருமணபாக்கியம் வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்பிகையுடன் கூறுகின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் திருகல்யாண திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 4 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருகல்யாணம் நேற்று காலை மங்கள இசை ஒலிக்க சிறப்பாக நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.