பதிவு செய்த நாள்
13
மே
2014
12:05
அவிநாசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐயப்பன் கோவிலில், மூலவர் சிலை வார்ப்பு திருப்பணி நடந்தது. அவிநாசி, மங்கலம் ரோடு, பைபாஸ் அருகில், ஐயப்பனுக்கு புதிதாக கோவில் கட்டும் பணி, ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. திருப்பணி 80 சதவீதம் நிறைவுற்றுள்ள நிலையில், மூலவருக்கு சிலை வார்ப்பு திருப்பணி நடந்தது. தங்கம், வெள்ளி, வெண்கலம், செம்பு மற்றும் பித்தளை ஆகிய ஐம்பொன் உலோகத்தால், சிலை வார்ப்பு பணிகள் நடந்தன. இதையொட்டி, கணபதி ஹோமம் நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த சிவக்குமார சிவாச்சாரியார், பெங்களூரு வேத விக்ஞான் மஹா வேதபாடசலை முதல்வர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில், சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, பக்தர்கள் முன்னிலையில், சிலை வார்ப்பு பணி நடந்தது. ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், "பக்தர்கள் நன்கொடையாக அளித்த உலோகங்களை, கோவில் வளாகத்தில் உருக்கினோம். அவை, கும்பகோணம் எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பன் மூலவர் விக்ரகம் உருவாக்கப்படும், என்றனர்.