பதிவு செய்த நாள்
30
மே
2014
10:05
திருப்பதி;திருப்பதி தேவஸ்தான கோசாலை, உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என, தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம், மூன்று நூற்றாண்டுகளாக கோசாலை அமைத்து, பசுக்களை பராமரித்து வருகிறது. நாட்டின் அரிய வகை பசுக்கள், பல அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அவற்றை பாதுகாக்க முயற்சி நடந்து வருகிறது.இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தேவஸ்தான் செயல் அதிகாரி, போலோ பாஸ்கர், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை அழைத்து ஆலோசித்தார்.பின், போலோ பாஸ்கர் கூறுகையில், இந்துக்கள், பசுக்களை, கோமாதா என, வணங்கி வருகின்றனர். அதையும் தாண்டி, பசுவிடம் இருந்து பெறப்படும் பொருட்கள், பல வகையிலும் பயன்படுகின்றன. அதனால், பசுக்களை பாதுகாப்பதில், தேவஸ்தானம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அதற்கேற்ப, தேவஸ்தான கோசாலை உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும், என்றார்.