பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
11:06
திருப்பதி: திருமலையில், வெங்கடேச பெருமாளை திருப்தியாக தரிசனம் செய்ய முடியாமல், பக்தர்கள் தவித்ததற்கு, தேவஸ்தானம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பக்தர்கள் திருப்தியாக, தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி என்றதும், அனைவரின் நினைவிற்கும் வருவது, வெங்கடேச பெருமாள், லட்டு மற்றும் ஜருகண்டி என்ற கோஷம் தான். நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து, பெருமாளை தரிசிக்க செல்லும்போது, அங்கிருக்கும் ஊழியர்கள், ஜருகண்டி எனக் கூறியபடி, திருப்தியாக பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல், பக்தர்களை இழுப்பர். இதனால், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தவிர்க்க, அவ்விடத்தில், எஸ்கலேட்டர் அமைப்பது, கருவறை சுவரில் ஓட்டை போடுவது என, பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டனர். அவை சாஸ்திர விதிகளுக்கு முரணானது என, பெரியவர்கள் கூறியதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், தேவஸ்தான அதிகாரிகள் திணறினர். இச்சூழ்நிலையில், பக்தர்கள் பெருமாளை, திருப்தியாக தரிசனம் செய்ய வசதியாக, மூன்று அடுக்கு உயர் மேடைகளை அமைத்தனர். அதில் ஏறி பக்தர்கள் திருப்தியாக பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இது, பக்தர்களுக்கும், தேவஸ்தானத்திற்கும் திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.