மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 02:06
மதுரை : மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மழைக்காலத்தில் மணலுார் பகுதியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தெப்பத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டது. மழை இல்லாததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க கற்களை அகற்றி, கண்மாய் மண்ணை நிரப்பி வெற்றி கண்டனர். தற்போது இரண்டு அடி உயரத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பொற்றாமரைக்குளத்தில் தண்ணீர் வற்றாமல் தேங்கி நிற்கிறது. இக்குழுவினரை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக்குளத்திலும் நிரந்தரமாக தண்ணீர் தேக்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் முடிவு செய்து, ரூ.10 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.