பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
01:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாற்றை விளக்கும், ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. ராமேஸ்வரம் கோயில் தல வரலாற்றை விளக்கும், ராமலிங்க பிரதிஷ்டை விழா, ஜூன் 6 ல் துவங்கியது. நேற்று, ராமலிங்க பிரதிஷ்டை நடந்தது. ராமாயண காவியத்தில், பிரமஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை செய்ய ராமர் விரும்பினார். உடனே அனுமன் கைலாய மலைக்கு சென்று சிவலிங்கத்தை தூக்கி வந்தார். அவர் வர தாமதம் ஆகியதால், கடற்கரை மணலில் பிடித்த சிவலிங்கத்திற்கு ராமர் பூஜை செய்கிறார். இதை கண்டு சினம் கொண்ட அனுமன், வாலால் மணல் லிங்கத்தை இழுக்க முயற்சித்து, வால் அறுந்து விடுகிறது. உடனே ராமர், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறார். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக, நேற்று கோயிலில் சுவாமி சன்னதி அருகே கோயில் குருக்கள் விஜயகுமார் போகில், சிறப்பு பூஜை செய்தார். அப்போது அனுமன் வேடமணிந்த கோயில் குருக்கள் ராம், கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, சுவாமி சன்னதிக்குள் வைத்தனர். பின், மஹா தீபாராதனை நடந்தது. இதில், கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம் பங்கேற்றனர்.