பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
03:06
கௌசல்யா சுப்ரஜா பூர்வா ஸ்ந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்....
கோசலை குமரா! ஸ்ரீராமா! பொழுது புலர்கிறதே... தெய்விகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள்வாய் புருஷோத்தமா!
ஆஹா! இனிய மெட்டு, செம்மையான பொருள், ஆழ்ந்த கருத்து, அழகிய ராகத்துடன் திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்விகப்பாடல் - ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்....
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன் குரலில் நம் செவிக்குள் பாய்ந்து நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்..
இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் திருப்பள்ளி யெழுச்சி என்பார்கள். இந்த இடத்தில், ஆதியந்தம் இல்லாத இறைவனுக்கு ஏது தூக்கம்? என்றொரு கேள்வி எழலாம். பக்தியில் சிறந்த நிலை சரணாகதி, எல்லாம் அவன் செயல் என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம். இப்படியான பக்குவ நிலை வாய்க்க வழிபாடுகளும், இறைவனுக்கான பணிவிடைகளும் உதவி செய்யும்.
சரி! எப்படி வழிபடுவது, என்னென்ன பணிவிடைகள் செய்வது? அன்னையாய் , குழந்தையாய், காதலனாய், தோழனாய், இறைவனைப்பாடி உருகிய ஆழ்வார்களும், அடியார்களும், அதன்மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம் செய்து கொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கு செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு ரசானுபவம்! இதன் அடிப்படையிலான விளைவுதான், திருப்பள்ளியெழுச்சி பாடல்களும், வழிபாடுகளும் எனலாம். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணக்கவாசகரும், திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் கூட சப்ரபாதம் உண்டு. அவ்வளவு ஏன்? ஜைன மதத்திலும் சுப்ரபாதமும் பாடப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே விசேஷமானவை, எனினும் ஸ்ரீவேங்கடேச சப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது. ஸ்ரீராமபிரானின் பால பருவம், அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும்,அழிக்கவும் ஸ்ரீராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக்கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர் குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீராமனை அனுப்ப சம்மதித்தார். கூடவே லஷ்மணனையும் அனுப்பி வைத்தார். விஸ்மாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன் வழியில் அமைந்திருந்த பல புண்ணியத்தலங்களின் மகிமைகளையும் மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ஸ்ரீராமனும் , லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன் கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். பொழுது புலர்ந்தது, அரண்மனையில் பஞ்சனையில் படுத்து உறங்கவேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பதை கண்டு நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி, மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார். கௌசல்யா சுப்ரஜா ராமா.. என்று! ஆக முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது. இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது , இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்...
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்புவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனை சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும், அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து. ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகவும் இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
2-ம் பகுதி- ஸ்ரீவேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.
3-ம் பகுதியான பிரபத்தியில் திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.
4-ம் பகுதியான மங்களம் நிறைவுப்பகுதி, மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும். இந்த பகுதியில் 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
அரங்கமாநகருளானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தை சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது.