பதிவு செய்த நாள்
07
ஜூலை
2014
11:07
சிதம்பரம்: சிதம்பரத்தில், தருமை ஆதீனம் முன்னிலையில், பன்னிரு திருமுறை உரை நுால் யானை மேல் வைத்து ஊர்வலம் நடந்தது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமை ஆதீன மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை நுால்கள் வெளியீட்டு விழா, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயி ரங்கால் மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதனையொட்டி, தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், சொக்கநாதப் பெருமானுடன் ஞான ரதத்தில், திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் எழுந்தருளி, பன்னிரு திருமுறை உரை நு ால்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பன்னிரு திருமுறை உரை நுால்களை, மூன்று யானைகள் மீது வைத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை சிதம்பரத்தில் நடந்தது. ஊர்வலத்தில் 63 நாயன்மார்கள் வேடம் அணிந்த சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். சி வனடியார்கள் பன்னிரு திருமுறை பாடியவாறும், பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர். ஊர்வலத்தில், திருவாடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மவுன மடம் சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீன கர்த்தாக்கள், தமிழ் அறிஞர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ஊர்வலம், நடராஜர் கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று, ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தது.