பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை, சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த திங்கள்கிழமை மாலை துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 6:00 மணியளவில், யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள், கோவில் மேல்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின், 36 அடி உயரமுள்ள கொடிமரத்திற்கு, புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 11:00 மணியளவில், உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து, ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. இதில், ஆர்.கே.பேட்டை, விளக்கணாம்பூடி புதுார், செல்லாத்துார், ஸ்ரீகிருஷ்ணாபுரம், ராஜாநகரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.