பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
04:07
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் உலக மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமாய் வாழ வேண்டி சதசண்டீ யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 12-ஆவது ஆண்டாக சதசண்டீ யாகம் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) தொடங்குகிறது. 26-ஆம் தேதி வரை 5 நாள்கள் யாகம் நடைபெறுகிறது.செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கும் முதல் நாள் யாகத்தில் சரபர், சூலினி, துர்க்கை, மகா ம்ருத்யஞ்சய ஹோமங்கள், சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது. இரண்டாவது நாளில் நவக்கிரகம், லெட்சுமி நாராயண ஹோமங்கள் நடத்தப்படுகிறது.24-இல் குழந்தைப் பேறு கிடைக்க புத்திர காமேஷ்டி ஹோமம் நடைபெறுகிறது. இதில் குழந்தை இல்லாத தம்பதியர் பங்கேற்கலாம். அதன்பின் சுதர்சன, தன்வந்திரி, சஷ்டி பைரவ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. 25-இல் வாஞ்ச கல்பலதா, சாம்ராஜ்ய லெட்சுமி, சுயம்வரா பார்வதி, வாராகி, ராஜமாதங்கி, வனதுர்க்கா, தட்சிண காளி ஹோமங்கள் நடைபெறுகிறது.யாகத்தின் கடைசி நாளான 26-ஆம் தேதி மகா சதசண்டீ யாகம் நடைபெறுகிறது. இரவு யாகம் முடிந்து பூர்ணாஹுதி நடைபெற்று பிரத்யங்கிரா தேவிக்கு புனிதநீரால் அபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த யாகத்தில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், தங்கம், வெள்ளி, இனிப்பு வகைகள், பழ வகைகள், பூ மாலைகள், மற்றும் திரவியப் பொருள்கள் இடப்படும். சதசண்டீ யாகத்துக்காக கோயில் யாகசாலையில் ஏராளமான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் யாகத்தை நடத்துகின்றனர்.யாகத்தில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலில் 24 மணி நேரமும் அன்னதானமும் தங்க இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. யாகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்துள்ளனர்.