பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, ஒதியத்தூரில் நடந்த, செல்லியம்மன் தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் கிராமத்தில், செல்லியம்மன் ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, 15ம் தேதி இரவு செல்லியம்மன் ஸ்வாமிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் கட்டளைதாரர்கள் சார்பில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்து, வீதி உலா வந்தது. கடந்த, 21ம் தேதி அய்யனார் ஸ்வாமிக்கு பொங்கல் படையல் செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம், செல்லியம்மன் சக்தி அழைத்தல் நடந்து, ஸ்வாமிக்கு பொங்கல் படையல் செய்து, மாவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, மாலை 5 மணியளவில், ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் செய்து, மாலை 6 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வடம் பிடித்தல் நடந்து, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தது. 18 ஆண்டுக்கு பின் நடந்த, தேர்த்திருவிழாவில் சுற்று வட்டார கிராம பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி வழிபாடு செய்தனர்.