பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
ஓமலூர்: ஓமலூர் அருகே, மழை வேண்டி கிராம மக்கள், எல்லை முனியப்பனுக்கு பூஜை செய்து வினோத வழிபாடு செய்தனர். ஓமலூர் அருகே, கோட்டைமாரியம்மன் கோயில் ஊராட்சியில், பெரமச்சூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக சரிவர மழை இல்லாமல் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். பின்னர், மூதாதையர்கள் வழிபட்டது போல், ஊரின் எல்லையில் உள்ள, எல்லை முனியப்பனுக்கு, பன்றியை பலி கொடுத்து, பூஜை செய்து வழிபாடு செய்ய முடிவெடுத்தனர். அதன்படி ஊரில் உள்ள அனைவரும் ஒன்று கூடி மழை வேண்டி, எல்லை முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பன்றியை பலியிட்டு பூஜைகள் செய்தனர். பின்னர் அனைவருக்கும், பிரசாதமாக பொரி மற்றும் கடலை வழங்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: எங்கள் முன்னோர் மழை வராமல் இருந்தபோது, இதுபோன்று ஊரின் எல்லையில் உள்ள முனியப்பனுக்கு பன்றியை பலியிட்டு, சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். அப்போது உடனேயே மழை வந்துள்ளது. அந்த நம்பிக்கையில்தான் ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லை முனியப்பனுக்கு பன்றியை பலியிட்டு வழிபட்டுள்ளோம். எப்போதெல்லாம் மழை இல்லாமல் வறட்சி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வழிபாடுகளை செய்வதை பல நூறு ஆண்டுகளாக தொன்று தொட்டு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.