பதிவு செய்த நாள்
28
ஜூலை
2014
12:07
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. முன்னதாக, யாகசாலை அமைத்து, யாகம் பூஜை செய்யப்பட்டது. சிங்க உருவம் போட்ட இரண்டு கொடிகளை, தேக்கம்பட்டி ஊர் மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிகளுக்கு பூஜைகள் செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் உடன் வந்தனர்.யாகசாலையில் கொடிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கொடிமரத்தில் ஒரு கொடியையும், மற்றொரு கொடியை பச்சை மூங்கிலில் ஏற்றி, பந்தலில் கட்டினர்.விழாவில், பரம்பரை அறங்காவலர் வசந்தா, பூசாரி பரமேஸ்வரன், கோவில் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இன்று இரவு பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நாளை காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.