திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 9:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து 9:15 மணிக்கு ஓதுவார்கள் சுவாமிநாதன், சிவராஜபதி குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.காலை 10:45 மணிக்கு சித்தாந்த நூல்களின் உரைவளம் என்ற தலைப்பில் பேராசிரியர்கள் முத்துசாமி, கந்தசாமி ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினர். மதியம் 1:00 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சைவசித்தாந்த பயிற்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் வைத்தியநாத ஈசான தேசிகரின் படம் திறக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சென்னை, திருநெல்வேலி, சீர்காழி, ஓசூர், அரக்கோணம் உள்ளிட்ட 18 சைவ சித்தாந்த பயிற்சி மையங்களை சேர்ந்த 380 பேர் கலந்து கொண்டனர். கணேசன் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை மெய்கண்டார் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், சைவ சித்தாந்த பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள் செய்திருந்தனர்.