பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
தேவதானப்பட்டி : தஞ்சை ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள், பூர்ணாம்பாள், புஷ்பதாயாம்பாள் தெய்வங்கள் உள்ளன. உள் வளாகத்தில் தீர்த்த தொட்டி கிணறு உள்ளது.இக்கிணற்றில் நீர் எடுத்து நாள்தோறும் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கனவில் தோன்றினார்: ராஜ ராஜ சோழன் பாண்டிய நாட்டிற்கு வந்த போது குள்ளப்புரத்தில் தங்கியுள்ளார். இரவில் தீராத வயிற்று வலி ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளார்.அப்போது மன்னன் கனவில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் தோன்றி மறைந்துள்ளார். உடனடியாக மன்னனுக்கு வயிற்று வலி தீர்ந்துள்ளது. இதற்காக மன்னன் உத்தண்ட சவுந்தராஜ பெருமாளுக்கு கோயில் கட்டிள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் குள்ளப்புரம், மருகால்பட்டி, சந்திராபுரம், கோயில்புரம், கன்னிமார்புரம் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொள்வார்கள்.பணிகள் நிறுத்தம்:இந்நிலையில் கோயில் இந்துஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு தேரோட்டம் நடக்கவில்லை. கோயிலில் புதிய தேர் செய்வதற்காக அரசு சார்பில் 14 லட்சம் ரூபாய், பொதுமக்கள் பங்களிப்பாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தேர் கட்டும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஆனால் பணிகள் தொடர்ந்து நடக்கவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் செய்யும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக அதிகாரி ராஜா கூறுகையில், "தேர் பணியில் ஈடுபட்டவருக்கு உடல் நலம் சரி இல்லை. அதனால் தடை பட்டுள்ளது. விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.