பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் தெப்ப குளத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.காரைக்கால் பாரதியார் சாலையில் காரைக்கால் அம்மையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தெப்பகுளம் (சந்திர தீர்த்தம்) சிறப்பு வாய்ந்தது. அங்குள்ள நித்திய கல்யாண பெருமாள், கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவத்தின்போது, இக்குளத்தில் தெப்பல் திருவிழா நடப்பது வழக்கம்.சுற்றுலாத்துறை மூலம் 3.6 கோடி ரூபாய் நிதி பெற்று, அம்மையார் கோவில் குளம் சமீபத்தில் புனரமைப்பு செய்யப்பட்டது. குளத்தைச் சுற்றி நடைபாதை, பூங்காக்கள், ஹைமாஸ் விளக்குகள், தண்ணீரை சுத்தம் செய்ய மோட்டார் பம்பு அறை, நடைபாதை பயில்வோர் இளைப்பார இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு, கடந்த 2010ம் ஆண்டு குளம் திறக்கப்பட்டது.அழகிய தோற்றத்துடன் காணப்படும் இக்குளத்தை சுற்றிலும், காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகளுடன் வந்து, குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை போட்டு ரசிக்கின்றனர்.இந்நிலையில், குளத்திற்கு வரும் பொதுமக்கள், உணவு பொருட்களை வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு குப்பைகளை குளத்தில் வீசி செல்கின்றனர். இதனால் குளத்தில் குப்பை குவியல்கள் அதிகம் சேர்ந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், குளத்தை சுற்றி குப்பை தொட்டிகள் வைக்கவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.