சபரிமலை: மலையாள புத்தாண்டு தினத்தில், ஐயப்பனை தரிசிப்பதற்காக, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று நடந்த ஒரு விழாவில், இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது மலையாள பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5:30 க்கு திறந்தது. வேறு எந்த விசேஷ பூஜையும் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை மூடப்பட்டது. மலையாள புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்தார். அப்போது ஐயப்பனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து தந்திரி அபிஷேகங்கள் நடத்திய பின், நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். அதன்பின், வழக்கமான பூஜைகள் நடந்தன. வரும் ஆக., 21 வரை கோயில் நடை திறந்திருக்கும். அனைத்து நாட்களிலும் இரவு படிபூஜை நடைபெறும். ஆக., 21 இரவு 10:00 மணிக்கு நடை மூடப்பட்ட பின், திருவோண பூஜைக்காக செப்., 5 ல் மாலை நடை திறக்கப்படும். செப்.,9 ல் இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில் 3 வது ஆண்டாக நேற்று அரிவராசனம் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த ஆண்டுக்கான விருதை மலையாள பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு, தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் வழங்கினார். இதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.